அசாமில் இயற்கை எரிவாயு கிணற்றில் பயங்கர தீ விபத்து - 2 பேர் பலி


அசாமில் இயற்கை எரிவாயு கிணற்றில் பயங்கர தீ விபத்து - 2 பேர் பலி
x
தினத்தந்தி 10 Jun 2020 12:19 PM GMT (Updated: 2020-06-10T17:49:32+05:30)

அசாம் மாநிலம், பக்ஜான் பகுதியில் ஆயில் இந்தியா லிமிட்டெட் நிறுவனத்திற்கு சொந்தமான எரிவாயு கிணற்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கவுகாத்தி,

அசாமின் தின்சுகியா மாவட்டத்தில் ஆயில் இந்தியா லிமிட்டெட் நிறுவனத்திற்கு சொந்தமான இயற்கை எரிவாயு சேகரிக்கப்படும் கிணறு ஒன்றில் கடந்த 14 நாட்களாக கசிவு ஏற்பட்டிருந்த நிலையில் நேற்று இந்தக் கிணற்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

எரிவாயு வயல் பகுதியில் துப்புரவு பணிகள் நடைபெற்று வரும் போது தீப்பிடித்ததாக ஆயில் இந்தியா தெரிவித்துள்ளது.

அசாம் முதல்-மந்திரி சர்பானந்தா சோனோவால், மத்திய பெட்ரோலிய மந்திரி தர்மேந்திர பிரதானை தொடர்பு கொண்டு இதுகுறித்து பேசினார். நிலைமையைக் கண்காணிக்க தொழில்துறை மந்திரி சந்திரமோகன் படோவரியை அப்பகுதிக்கு அனுப்பியுள்ளார். சம்பவ இடத்திற்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (என்.டி.ஆர்.எஃப்) விரைந்தனர்.

இந்திய விமானப்படை மற்றும் ராணுவம், தீயணைப்பு நடவடிக்கைகளில் களமிறங்கியுள்ளன. விமானப்படை மூன்று தீயணைப்பு கருவிகளை அனுப்பியுள்ளது, மேலும் ராணுவம் அந்த இடத்தை சுற்றிலும் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி துணை ராணுவப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. கொழுந்துவிட்டு எரியும் நெருப்பை அணைக்க பேரிடர் மீட்புக் குழு வீரர்கள் போராடி வருகின்றனர். தொடர் முயற்சிகளுக்கு பிறகும் தீ இன்னும் கட்டுப்பாட்டுக்கு வரவில்லை.  இதில் இருவர் பலியாகியுள்ளனர்.

எரிவாயு கிணற்றை சுற்றிலும் உள்ள சுமார் 2 கி.மீ பகுதிகளில் வசிக்கும் குறைந்தது 6,000 பேர் வெளியேற்றப்பட்டனர். நிவாரண முகாம்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஆயில் இந்தியா லிமிடெட் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ .30,000 நிதி நிவாரணத்தையும் அறிவித்துள்ளது. இப்போதைய நிலவரப்படி சுமார் 6 கிராமங்களில் தீ பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

நேற்று பிற்பகல் தொடங்கிய தீயில் இருந்து எழுந்த புகை, 10 கி.மீ தூரத்தில் இருந்தும் பார்க்க முடிவதாகவும், இது அருகிலுள்ள கிராமங்களுக்கு பரவியதாகவும் உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.


Next Story