கொரோனா வீரர்களுக்கு பாடல் அர்ப்பணித்த துணை ராணுவம்; சமூக வலைத்தளத்தில் வெளியானது


கொரோனா வீரர்களுக்கு பாடல் அர்ப்பணித்த துணை ராணுவம்; சமூக வலைத்தளத்தில் வெளியானது
x
தினத்தந்தி 12 Jun 2020 3:45 AM IST (Updated: 12 Jun 2020 1:38 AM IST)
t-max-icont-min-icon

நாட்டின் பாதுகாப்பை ஆயுதப்படைகள் பார்த்துக்கொள்கின்றன என்றால் கொரோனா பாதித்தவர்களின் பாதுகாப்பை டாக்டர்கள், நர்சுகள், துணை மருத்துவ பணியாளர்கள், சுகாதாரப்பணியாளர்கள்தான் பார்த்து வருகின்றனர்.

புதுடெல்லி,

தங்கள் உயிரைப்பற்றிக்கூட கவலைப்படாமல் கொரோனா தாக்குதலுக்கு ஆளானவர்களை காப்பாற்றுவதற்காக முன்னணியில் இருந்து இவர்கள் போராடி வருகிறார்கள்.

இவர்களின் மகோன்னத சேவையை வார்த்தைகளால் பாராட்டி விட முடியாது.

அதனால்தானோ என்னவோ துணை ராணுவ படைகளில் ஒன்றான இந்திய திபெத் எல்லை பாதுகாப்பு போலீஸ் படை வீரர் விக்ரம்ஜித் சிங் என்பவர் ‘ராக் ஹசாலா, ஹிம்மத் நா ஹார்’ என்ற பாடலை வீடியோவாக எடுத்து, கொரோனா போரில் முன்னணியில் நின்று போராடுகிற வீரர்களுக்கு அர்ப்பணித்து, தங்கள் டுவிட்டர் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

கொரோனா வீரர்களின் போரை சித்தரிக்கும் இந்தப் பாடல் காட்சியில், தனிமைப்படுத்தல் மையங்களின் தொடக்கத்தில் இருந்து, கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கிற தீவிர சிகிச்சை வரையும் சொல்லப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, கொரோனா மேலாண்மை, திறன் மேம்பாடு, தளவாட பொருட்கள் வினியோகம் ஆகியவற்றில் இந்திய திபெத் எல்லை பாதுகாப்பு போலீஸ் படை எப்படி முன்னணியில் விளங்குகிறது என்பதுவும் காட்டப்பட்டுள்ளது.

கொரோனா பொது முடக்க காலத்தில், தளவாடங்கள் வினியோகத்தில் இந்தப் படை எப்படி சிறப்பாக செயல்பட்டது என்பதுவும் பாடலில் சொல்லப்பட்டுள்ளது.

இன்னும் இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவலின் பல்வேறு நிலைகளையும், இந்திய திபெத் எல்லை பாதுகாப்பு போலீஸ் படையின் மேலாண்மை மற்றும் கடமைகளையும் பாடல் சொல்கிறது.

இந்தப் பாடல் வீடியோ பலராலும் விரும்பப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் 28-ந் தேதி, இதே இந்திய திபெத் எல்லை பாதுகாப்பு போலீஸ் படை ஏட்டு அர்ஜூன் கேரியால் என்பவர், கொரோனா போர் வீரர்களுக்கு மற்றொரு பாடலை அர்ப்பணித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

Next Story