மத்திய நிதித்துறை ராஜாங்க மந்திரி அனுராக் தாக்கூர், ‘தினத்தந்தி’க்கு சிறப்பு பேட்டி


மத்திய நிதித்துறை ராஜாங்க மந்திரி அனுராக் தாக்கூர், ‘தினத்தந்தி’க்கு சிறப்பு பேட்டி
x
தினத்தந்தி 12 Jun 2020 5:30 AM IST (Updated: 12 Jun 2020 6:02 AM IST)
t-max-icont-min-icon

பிரதமரின் பொருளாதார திட்டங்களால் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்தெந்த வகையில் பலன் கிடைக்கும்? என்பது பற்றி மத்திய நிதித்துறை ராஜாங்க மந்திரி அனுராக் தாக்கூர், ‘தினத்தந்தி’க்கு சிறப்பு பேட்டி அளித்தார்.

சென்னை,

மத்திய நிதித்துறை ராஜாங்க மந்திரி அனுராக் தாக்கூர், ‘தினத்தந்தி’க்கு சிறப்பு பேட்டி அளித்தார். கேள்வி-பதில் விவரம் வருமாறு:-

கேள்வி:- கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு பிரதமர், மத்திய நிதித்துறை மந்திரி ஆகியோருடன் தாங்களும் இணைந்து வெளியிட்ட பொருளாதார தொகுப்பு திட்டங்களால் ஏற்பட்ட உடனடி மாற்றங்கள் என்ன?

பதில்:- பொருளாதார தொகுப்பு திட்டங்களால் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க பிரதமர் நரேந்திர மோடி அரசு உறுதிபூண்டுள்ளது. இது நமது கட்டமைப்பு சீர்திருத்தங்கள், பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும். தொழில்களுக்கு உயிரூட்டுவதுடன், பொருளாதாரம் புத்தாக்கம் பெறுவதை முன்னெடுத்து செல்வதுதான் சுயசார்புத் திட்டத்தின் நோக்கம்.

புதிய வேலைவாய்ப்புகள்

சுயசார்புத் தொகுப்பின் கீழ் ரூ.20.97 லட்சம் கோடி கிடைக்கச் செய்ய மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இது பட்ஜெட் நிதி மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்களிடமிருந்து நேரடியாக வர உள்ளது. நமது பொருளாதார நிவாரண நடவடிக்கைகள், தேவையை உருவாக்கும், தொழில்களுக்கு ஆதரவு அளிக்கும். அதனால் நாடு சுயசார்பு கொண்டதாக மாற்றுவதோடு மட்டுமன்றி, புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும். புத்தாக்கத்தையும், தனியார்துறை முதலீடுகளையும் ஊக்குவிக்கும்.

முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் என்பதால், அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளை வல்லுநர்களும், தொழில்துறை தலைவர்களும் வரவேற்றுள்ளனர். கொரோனா தொற்றுக்குப் பிந்தைய உலகில், வளர்ச்சிக்கான புதிய வழிகளை தென் மாநிலங்கள் ஏற்படுத்தும்.

வினியோகம்தான் இலக்கா?

கேள்வி:- அறிவிப்புகள் அனைத்துமே தேவையைப் பற்றி அல்லாமல், விநியோகத்தை மட்டுமே இலக்காகக் கொண்டது என்று ஒரு கருத்து நிலவுகிறது. இது குறித்து உங்களது பதில் என்ன?

பதில்:- விநியோக அடிப்படையிலான நடவடிக்கைகள் என்பது அதை மட்டும் சார்ந்தது அல்ல, அவை தேவைகளையும் ஏற்படுத்தும். மக்களுக்கும், தொழில்துறையினருக்கும் நிதி மற்றும் பிற வருவாய்க்கான வாய்ப்பு அளிக்கப்படும்போது, நுகர்வோரின் தேவை அதிகரிக்கும்.

பிரதமரின் ஏழைகள் நலத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே 42 கோடி மக்களுக்கு ரூ.64 ஆயிரம் கோடி நிதியுதவி கிடைத்துள்ளது.

பிரதமரின் விவசாயிகள் நிதித்திட்டத்தின் கீழ் ரூ.18 ஆயிரம் கோடிக்கும் மேல் வழங்கப்பட்டுள்ளது. இது 9 கோடி விவசாயிகளைச் சென்று சேர்ந்துள்ளது. மக்கள் நிதி கணக்கு வைத்துள்ள 20 கோடி பெண்களுக்கு மூன்று தவணைகளாக ரூ.31 ஆயிரம் கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும், வயது முதிர்ந்தவர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் என 2.82 கோடி பேருக்கு இரண்டு தவணைகளாக ரூ.2,807 கோடி வழங்கப்பட்டுள்ளது. ரூ.3,950 கோடி தொகையை 3 கோடிக்கும் மேற்பட்ட கட்டிட மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் பெற்றுள்ளனர்.

மக்களுக்கு பயன்

உஜ்வாலா திட்டத்தின் கீழ் சுமார் 8 கோடி பேர் இலவச எரிவாயு சிலிண்டர்களை பெற்றுள்ளனர். நேரடி மானியத் திட்டத்தின் கீழ், வங்கிக் கணக்குகளுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.9 ஆயிரம் கோடி பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நேரடி மானியப் பரிமாற்றங்களால், ஏற்கனவே மக்களின் வங்கிக்கணக்குகளுக்கு பணம் நேரடியாகச் சென்று சேர்ந்துள்ளது. இது தேவையை உருவாக்கும்.

மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.1 லட்சம் கோடி மூலம், 300 கோடி தனிநபர் நாள் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, கூடுதல் வருமானத்தை அளிக்கும். குறிப்பாக, தங்களது கிராமங்களுக்குத் திரும்பியுள்ள புலம் பெயர் தொழிலாளர்களுக்குப் பயன் அளிக்கும்.

வேளாண்மையில் நாம் மேற்கொண்டுள்ள வரலாற்றுப்பூர்வ சீர்திருத்தங்கள், இந்தியா முழுமைக்கும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்து, வளர்ச்சிக்கான புதிய வழிகளை ஏற்படுத்தும்.

தொழிலாளர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் அடுத்த 6 மாதங்களுக்கான 12 சதவீதம் மற்றும் 12 சதவீத ஈட்டுறுதித் தொகையை மத்திய அரசே செலுத்தும் என்று நாங்கள் அறிவித்துள்ளோம். இது, மக்களுக்கு மேலும் ரூ.2,500 கோடி அளவுக்கு பயனளிக்கும்.

பணப் புழக்கம்

சம்பளம் பெறாத பிரிவினருக்கான வருமானத்தில் நேரடியான வரிப்பிடித்தம் மற்றும் டி.சி.எஸ். அளவு 25 சதவீதம் குறைத்துள்ளதால், கூடுதலாக ரூ.50 ஆயிரம் கோடி பணம் புழக்கத்தில் இருக்கும். 17 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு திருப்பி அளிக்கப்பட வேண்டிய ரூ.27 ஆயிரம் கோடி அளவுக்கான வரியை, இந்த ஊரடங்கு காலத்தில் முன்கூட்டியே வழங்கியுள்ளோம்.

அவசரகால கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ் ரூ.17 ஆயிரத்து 705 கோடி அளவுக்குக் கடன் வழங்குவதற்கு பொதுத்துறை வங்கிகள் ஒப்புதல் அளித்துள்ளன என்பதை நான் பகிர்ந்துகொள்கிறேன். இவற்றில் பெரும்பாலானவை இரண்டாம் கட்ட நகரங்களில் உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இது கூலி வழங்குதல், புதிதாக பொருள்களை வாங்கி இருப்பு வைத்தல், வாடகை மற்றும் மற்ற பொருள்களை வாங்குவதற்குப் பயன்படுத்தப்படும். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் தேவையை அதிகரிக்கச் செய்யும்.

புதிய வாய்ப்புகள்

கேள்வி:- கொரோனா தொற்றால் வேலையிழப்பு என்பது மிகவும் அதிகமாக உள்ள நிலையில், இந்தத் தொகுப்பு நிதிகளால் எவ்வளவு பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்?

பதில்:- விவசாயிகள், பெண்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள், கட்டிட மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் போன்றோரின் கணக்குகளுக்கு நேரடிப்பணப் பரிமாற்றம் செய்துள்ளோம்.

மிகவும் பாதிக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த இவர்களுக்குத்தான் உடனடி நிதி தேவைப்படுகிறது. சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களுக்கும் நிதி ஆதரவு வழங்கியுள்ளோம், ரூ.17 ஆயிரத்து 705 கோடிக்கும் மேலான கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள், தொழிலை தொடர செய்வதுடன், வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, வேலைவாய்ப்புகளையும் பாதுகாக்கும். புதிய வாய்ப்புகளையும் உருவாக்கும்.

வேளாண் கட்டமைப்பு நிதியம்

ரூ.200 கோடி வரையிலான அரசின் டெண்டர்களில் சர்வதேச நிறுவனங்களுக்கு அனுமதியில்லை என்ற எங்களது அறிவிப்பு அமலுக்கு வந்துள்ளது. இது நமது சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைக்குப் பயனளிக்கும். மேலும், விரிவாக்கம் மற்றும் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை அளிக்கும்.

நிலக்கரி மற்றும் சுரங்கத்துறைகளில் தனியார்துறையினருக்கு வாய்ப்பு அளித்தல், முக்கியத்துவம் வாய்ந்த துறைகள் உள்பட அனைத்து துறைகளிலும் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி, நமது உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தளவாடங்கள் உற்பத்தியை அதிகரித்தல், விண்வெளித் துறையில் தொழில்முனைவோருடன் இணைந்து செயல்பட அனுமதிப்பது உள்ளிட்ட அறிவிப்புகளையும் நாங்கள் வெளியிட்டுள்ளோம்.

இதற்கும் மேலாக, ரூ.1 லட்சம் கோடி வேளாண் கட்டமைப்பு நிதியம் மற்றும் கட்டமைப்பில் முதலீடு ஆகியவை தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் காரணிகளாக அமையும்.

ப.சிதம்பரம் கருத்து

கேள்வி:- ரூ.20 லட்சம் கோடி நிதி ஊக்குவிப்புத் திட்டத்தை பிரதமர் அறிவித்தார். ஆனால், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.91 சதவீத அளவுக்கான ரூ.1 லட்சத்து 86 ஆயிரத்து 550 கோடி திட்டமே அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய முன்னாள் நிதித்துறை மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார். இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்:- நாங்கள் சரியான முறையிலேயே நிதியை பயன்படுத்துகிறோம். இந்தத் தொகுப்பின் மூலம், நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பினரும் பயனடைவதை உறுதி செய்துள்ளோம். நான் ஏற்கனவே பல்வேறு தரப்பினருக்கும் நேரடியாக வங்கிக்கணக்கில் பணம் வரவு வைத்ததையும், பணம் புழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும் பற்றி கூறியுள்ளேன். இது ஒவ்வொரு பிரிவினர் மற்றும் நிறுவனங்களுக்குப் பயனளிக்கும்.

வங்கி கடன் எளிதா?

கேள்வி:- வங்கியிலிருந்து கடன் பெறுவது என்பது எளிதானது அல்ல, இதற்கு அதிக ஆவணங்களை அளிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த நடைமுறைகள் எளிதாக்கப்படுமா?

பதில்:- பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுடன் கடந்த வாரத்தில் நாங்கள் ஆலோசனை நடத்தினோம். அவர்களிடமிருந்து முற்றிலும் சாதகமான கருத்துக்களையே நாங்கள் பெற்றோம். எங்களது அறிவிப்புகள் விரைந்து செயல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த வங்கிகளிடமிருந்து அடிக்கடி அறிக்கை பெற உள்ளோம்.

இதுநாள் வரை, அவசரகாலக் கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ் ரூ.17 ஆயிரத்து 705 கோடிக்கு பொதுத்துறை வங்கிகள் அனுமதி அளித்துள்ளன. இவற்றில் பெரும்பாலும் இரண்டாம் கட்ட நகரங்களில் உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இவை சம்பளம் வழங்குதல், இருப்பு வைத்திருப்பதற்காக பொருள்களை வாங்குதல், வாடகை மற்றும் பிற பொருள்கள் கொள்முதலுக்குப் பயன்படும்.

சிறு, குறு தொழில்கள்

கேள்வி:- இது தமிழகத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்களுக்கு எவ்வாறு உடனடியாக பலனளிக்கும்?

பதில்:- சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சி என்பது, அதனைச் சார்ந்த துறைகளிலும் பல்வேறு வகையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ள இந்தத் துறை, 12 கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதோடு, இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 45 சதவீத அளவுக்கு பங்களிப்பை செய்கிறது.

இதன் காரணமாக, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் உள்பட அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் ரூ.3 லட்சம் அளவுக்கு உத்தரவாதம் இல்லாமல் தானாகவே கடன் வழங்கப்படும் என்று அறிவித்தோம். 7.5 சதவீத வட்டியில் வழங்கப்படும் இந்தக் கடனுக்கான முழுமையான உத்தரவாதத்தை அரசு அளிக்கிறது.

அவசரகாலக் கடன்

இந்தக் கடனைத் திருப்பி செலுத்துவதற்கான காலம் 4 ஆண்டுகள். இதில் அசல் தொகையை 12 மாதங்களுக்கு செலுத்த வேண்டியதில்லை. நெருக்கடியில் உள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி அளவுக்கு துணைக்கடன் வழங்குகிறோம்.

இதன்மூலம் 2 லட்சம் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் பயனடையும். இந்த நெருக்கடியான நேரத்தில், நாடு முழுவதும் உள்ள நமது மக்கள், எந்தவொரு தடையையும் எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதிப்படுத்த, ஓய்வில்லாமல் உழைத்து வருகிறோம்.

தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் மையங்களாக கோவை, திருப்பூர் போன்ற நகரங்கள் உள்ளன. இங்குள்ள நிறுவனங்களுக்கு 100 சதவீத அவசரகாலக் கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ், பொதுத்துறை வங்கிகள் ஏற்கனவே கடன்களை வழங்கியுள்ளன.

தெரு வியாபாரிகள்

கேள்வி:- அமைப்புசாரா துறையினருக்கு இந்த நிதித் தொகுப்புகள் எவ்வாறு பயனளிக்கும்?

பதில்:- தெரு வியாபாரிகளுக்கு எளிதில் கடன் கிடைக்கச் செய்ய ரூ.5 ஆயிரம் சிறப்புக்கடன் வழங்கும் சிறப்புத் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது சுமார் 50 லட்சம் தெரு வியாபாரிகளுக்கு பலனளிக்கும். இது அவர்களுக்கு தொடக்கநிலை பணி மூலதனமான ரூ.10 ஆயிரத்துடன் வழங்கப்படும்.

கேட்டும் வரவில்லையே

கேள்வி:- கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் உள்ள நிலையில், தமிழக முதல்-அமைச்சர் தொடர்ந்து கோரிக்கை விடுத்த போதும், நிதியை வழங்காதது ஏன்?

பதில்:- மத்திய அரசுக்கு வருவாய் குறைந்துள்ள போதிலும், வரிப் பகிர்வு மற்றும் தீர்வைகளின் கீழ், மாநில அரசுக்கு ரூ.92 ஆயிரத்து 77 கோடியை ஏற்கனவே நாங்கள் வழங்கியுள்ளோம். இந்த முக்கியமான தருணத்தில், மாநிலங்களுக்கு நிதி பாதிப்பு இருக்கக்கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிதிக்குழுவின் மானியமாக மாநிலங்களுக்கு இதுநாள் வரை ரூ.28 ஆயிரத்து 487 கோடியை விடுவித்துள்ளோம். மாநிலங்களுக்கு ஏற்படும் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக வழங்கப்படும் டபுள்யூ.எம்.ஏ. (தி வேஸ் அண்டு மீன்ஸ் அட்வான்ஸ்) எனப்படும் கடன் தொகையை 60 சதவீதம் அதிகரித்துள்ளோம்.

பயன்படுத்தப்பட்ட கடனளவு

நிதி வரம்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டத்தின் கீழ் மாநில அரசுகள் கடன் பெறுவதற்கான வரம்பு, 2020-21-ம் ஆண்டில் மாநில ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக உயர்த்தியுள்ளோம். இதன் மூலம், மாநிலங்களுக்குக் கூடுதலாக ரூ.4.28 லட்சம் கோடி கிடைக்கும். ஆனால், இதுவரை வழங்கப்பட்ட கடனில், 14 சதவீதத் தொகையை மட்டுமே மாநிலங்கள் பயன்படுத்தியுள்ளன.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நேரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநிலங்களுக்கு ரூ.4,113 கோடியை சுகாதார அமைச்சகம் விடுவித்துள்ளது. மேலும், அத்தியாவசியப் பொருள்கள், பரிசோதனை ஆய்வகங்கள் மற்றும் கருவிகளுக்காக ரூ.4,300 கோடி வழங்கப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீடாக ஏற்கனவே ரூ.36 ஆயிரத்து 400 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களுக்கு அனைத்துவிதமான ஆதரவையும் அளிப்பதில் எந்தவொரு சமரசத்தையும் செய்ய மாட்டோம்.

நிபந்தனைகள் ஏன்?

கேள்வி:- இந்த நெருக்கடியான சூழலில், மாநிலங்கள் கடன் பெறுவதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டது ஏன்?

பதில்:- மாநிலங்கள் தங்களது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் தற்போது உள்ள 3 சதவீதத்திலிருந்து கூடுதலாக 2 சதவீதத்தைக் கடனாகப் பெறலாம். இதன் மூலம் மாநிலங்களுக்கு ரூ.4.28 லட்சம் கோடி வரை கூடுதலாகக் கிடைக்கும்.

இதுவரை ஒதுக்கப்பட்ட கடனில் 14 சதவீதம் வரை மட்டுமே மாநிலங்கள் பயன்படுத்தியுள்ளன. 86 சதவீதத் தொகை இதுவரை பயன்படுத்தப்படவில்லை. கூடுதலாக வழங்கப்படும் கடனில் 1.5 சதவீதம் அளவுக்கு, மாநிலங்கள் மேற்கொள்ளும் குறிப்பிடத்தக்க, அளவிடத்தக்க மற்றும் ஏற்றுக்கொள்ளத்தக்க சீர்திருத்தங்களைப் பொருத்தது.

இந்த சீர்திருத்தங்கள் என்பது, மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு மூலமும், பற்றாக்குறையைக் குறைப்பதன் மூலமும், தங்களது கடனை அதிகரிப்பதை உறுதிப்படுத்த வேண்டும். புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நலனை ஊக்குவிக்க வேண்டும்.

கூட்டாட்சியே தாரக மந்திரம்

உணவு விநியோகத்தில் ஏற்படும் குளறுபடிகளைக் குறைக்க வேண்டும். சுகாதாரம் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டை ஊக்குவிக்க வேண்டும். விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மின்துறை சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இந்த சீர்திருத்தங்களால் தமிழக மக்கள் பயனடைய மாட்டார்களா?.

தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களின் நீடித்த வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காகவே புதிய கடன்களை வழங்குவதன் ஒரு அங்கமாக இந்த நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதேநேரம், ஏழைகள் மற்றும் விவசாயிகளின் மேம்பாட்டுக்கான போதுமான ஆதரவு கிடைப்பது உறுதிப்படுத்தப்படுகிறது.

மாநில அரசுகளிடமிருந்து அனைத்து வகையான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பெறுவதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது. பொதுமுடக்கம் மற்றும் பிற நடவடிக்கைகள் தொடர்பான முடிவுகளை மாநில முதல்-அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகே நமது பிரதமர் மேற்கொண்டுள்ளார். ஒருங்கிணைந்த கூட்டாட்சியே எப்போதும் நமது தாரக மந்திரமாக இருந்து வருகிறது.

நேர்மறை எண்ணங்கள்

கேள்வி:- பல்வேறு நடவடிக்கைகள், நீண்டகால சீர்திருத்த நடவடிக்கைகளாக உள்ளன. பொருளாதாரத்தை உடனடியாக மீட்பதற்கு இவை எவ்வாறு உதவும்?

பதில்:- பிரதமரின் ஏழைகள் நலத்திட்டத்தின் கீழ், மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நேரடிப் பணப்பரிமாற்ற நடவடிக்கைகள் மூலம் தேவைகள் அதிகரிக்கும். சமூகத்தின் பல்வேறு பிரிவுகளையும் சேர்ந்தவர்களுக்கு உடனடி நிதி நிவாரணம் அளிக்கும்.

வேளாண்மைத் துறையை அதிக வலுவானதாக மாற்றுவது, விவசாயிகளின் நலனை உறுதிப்படுத்துவது, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கூடுதல் செயல் மூலதனம் போன்ற வளர்ச்சிக்கான புதிய நடவடிக்கைகள் ஆகியவை மூலம் நடுத்தர காலத்தில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

முன்னணி முதலீட்டு மையமாக இந்தியாவை மாற்ற மோடி அரசு உறுதி பூண்டுள்ளது. வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை மேற்கொள்வதிலும் அரசு கவனம் செலுத்தி வருகிறது.

இதன் காரணமாகவே, சூரியத்தகடுகள், செயற்கைப் நுண்ணறிவு மற்றும் பிற துறைகள் என சாதிக்கக் கூடிய துறைகளில் சிறப்பு கவனம் செலுத்துவோம். ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரமாக இந்தியாவை மாற்றவும் கவனம் செலுத்தி வருகிறோம்.

இந்தியா குறித்து நாங்கள் நேர்மறை எண்ணங்களைக் கொண்டுள்ளோம். ஏனென்றால், கொரோனா பெருந்தொற்றை வாய்ப்பாக மாற்றுவதற்கு தயாராக உள்ள 130 கோடி மக்கள் சக்தியை நாம் கொண்டுள்ளோம்.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

Next Story