மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.1 லட்சத்து 47 ஆயிரம் கோடி விவகாரம்: தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம்


மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.1 லட்சத்து 47 ஆயிரம் கோடி விவகாரம்: தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம்
x
தினத்தந்தி 12 Jun 2020 4:00 AM IST (Updated: 12 Jun 2020 2:48 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.1 லட்சத்து 47 ஆயிரம் கோடி தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு கடும்கண்டனம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

வோடபோன் ஐடியா, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட தனியார் தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள், மத்திய அரசுக்கு (தொலை தொடர்பு துறைக்கு) உரிம கட்டணம், அலைக்கற்றை கட்டணமாக ரூ.1 லட்சத்து 47 ஆயிரம் கோடி பாக்கியை செலுத்துமாறு சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு அக்டோபர் 24-ந் தேதி உத்தரவிட்டது. அந்த உத்தரவை தொலை தொடர்பு நிறுவனங்கள் ஏற்று செயல்படுத்தவில்லை.

இதுதொடர்பாக மத்திய தொலைதொடர்பு துறை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், தொலைதொடர்பு நிறுவனங்கள் நிலுவைத்தொகையை செலுத்த 20 ஆண்டுகள் அவகாசம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வு முன்பு கடந்த பிப்ரவரி 14-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, தங்கள் உத்தரவை ஏற்று செயல்படுத்தாத தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அவர்கள் மீது ஏன் கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கூடாது என கேள்வி எழுப்பினர்.

இதில் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, அந்த நிறுவனங்களிடம் இருந்து பாக்கி தொகையை வசூலிக்க வலியுறுத்த வேண்டாம் என்று கூறி சுற்றறிக்கை அனுப்பிய தொலைதொடர்பு துறை அதிகாரிக்கும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த வழக்கு நேற்று மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, அப்துல் நஜீர், எம்.ஆர்.ஷா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது வோடபோன் தரப்பில் ஆஜரான வக்கீல், எங்கள் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும், செலவுகளுக்குமே பணம் இல்லை என்று வாதாடினார். அதனைத்தொடர்ந்து ஏர்டெல் தரப்பில் ஆஜரான வக்கீல், 70 சதவீத நிலுவைத்தொகையை செலுத்தி விட்டோம் என்று தெரிவித்தார்.

அப்போது நீதிபதி அருண் மிஸ்ரா, தொலைதொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய தொகையை அந்த நிறுவனங்களே கணக்கிடுவது அல்லது அதனை அவர்களே மறுமதிப்பீடு செய்வதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். கடந்த ஆண்டு அக்டோபர் 24-ந் தேதி இந்த கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின்படி அபராதத்தொகை மற்றும் அதற்கான வட்டியை சேர்த்து செலுத்த வேண்டும். மத்திய தொலைத்தொடர்புத்துறை டெலிகாம் நிறுவனங்களுக்காக 20 ஆண்டுகள் அவகாசம் கோருவது மற்றும் தாங்களே அந்த தொகையை நிர்ணயிப்பது முற்றிலும் கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கையாக எடுத்துக்கொள்வோம்.

இதுபோன்ற சுய நிர்ணயத்தை யார் அனுமதித்தார்கள்?. இந்த விவகாரத்தில் சி.ஏ.ஜி. அலுவலகம் தணிக்கை செய்ய வேண்டும். இது கோர்ட்டின் மாண்பு தொடர்பான விவகாரமாகும். தாங்கள் கோர்ட்டை விட வலிமையானவர்கள் என்று தொலைதொடர்பு நிறுவனங்கள் கருதுகின்றனவா?, தொலைதொடர்பு நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர்களை கோர்ட்டில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி அவர்கள் கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்.

இந்த தொலைதொடர்பு நிறுவனங்கள் மக்களின் பணத்தை குவித்து அந்த வருமானத்தில் இருந்து ஒரு சிறுபகுதியை கூட அரசாங்கத்துக்கு செலுத்தக்கூடாது என்று நினைக்கிறார்கள் என்று கடும்கண்டனம் தெரிவித்தார். தொடர்ந்து இந்த வழக்கின் மீதான விசாரணை இரு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Next Story