நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தென்கொரிய பரிசோதனை கருவிகளை பயன்படுத்த பரிந்துரை - 15 நிமிடங்களில் முடிவு தெரியும்
நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தென்கொரிய பரிசோதனை கருவிகளை பயன்படுத்த பரிந்துரை செய்துள்ளது. மேலும் 15 நிமிடங்களில் முடிவு தெரியும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிக்கை வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி,
நாட்டின் உயரிய மருத்துவ ஆராய்ச்சி அமைப்பான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) சார்பில் நேற்று ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஸ்டாண்டர்டு க்யூ கோவிட்-19 டிடெக்ஷன் கிட் எனப்படும் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை கருவிகள், கொரோனாவை விரைவாக கண்டறியும் கருவிகள் ஆகும். இவற்றை தென்கொரியாவை சேர்ந்த எஸ்டி பயோசென்சார் என்ற நிறுவனம் உருவாக்கி உள்ளது.இந்த கருவியில், மாதிரியை வைத்த 15 நிமிடங்களில் முடிவு தெரியும்.
இதற்கு ஆய்வுக்கூட பரிசோதனை எதுவும் தேவையில்லை. நாமே வெறுங்கண்ணால் பார்க்கலாம். அதிகபட்சம் 30 நிமிடம்வரை ஆகும். பரிசோதனைக்கு பிறகு, அந்த அட்டையை அழித்துவிட வேண்டும். நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை கருவிகள் மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இதில் ஒருவருக்கு ‘தொற்று இல்லை‘ என்று காட்டினால், அதை மேலும் உறுதி செய்து கொள்வதற்காக, ஆர்டி-பிசிஆர் பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டும்.
ஆனால், யாருக்காவது தொற்று உறுதி செய்யப்பட்டால், அவர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டியது இல்லை. ஏனென்றால், ரேபிட் பரிசோதனையில் தொற்று உறுதியானால், பிசிஆர் பரிசோதனையிலும் அதே முடிவுதான் வரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story