சீனா, ரஷியா நாடுகளின் வெளியுறவு மந்திரிகளுடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை

சீனா, ரஷியா நாடுகளின் வெளியுறவு மந்திரிகளுடன் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் 22-ந்தேதி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
புதுடெல்லி,
ரஷியா, இந்தியா, சீனா நாடுகளின் (ரிக்) வெளியுறவு மந்திரிகள் பங்கேற்கும் கூட்டம் ஒன்று கடந்த மார்ச் மாதம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா வைரசின் ஆதிக்கத்தால் இந்த கூட்டம் தள்ளி வைக்கப்பட்டு தற்போது வருகிற 22-ந்தேதி நடத்தப்படுகிறது. காணொலி காட்சி மூலம் நடத்தப்படும் இந்த கூட்டத்தில் சீனா, ரஷியா நாட்டு வெளியுறவு மந்திரிகளுடன் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் 3 நாடுகளும் இணைந்து செயல்படுவது, 3 நாடுகளும் சந்திக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து 3 மந்திரிகளும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். மேலும் ஆப்கானிஸ்தானில் தலீபான்களுடன் அமெரிக்கா ஏற்படுத்தி உள்ள அமைதி ஒப்பந்தம் உள்ளிட்ட அம்சங்களும் இந்த பேச்சுவார்த்தையில் இடம்பெறும் என தெரிகிறது.
லடாக்கில் இந்தியா-சீனா ராணுவத்தினர் இடையே மோதல் ஏற்பட்டு இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவி வரும் இந்த சூழலில் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆனால் லடாக் மோதல் விவகாரம் இந்த கூட்டத்தில் பேசப்படாது என தகவல் வெளியாகி உள்ளது. முத்தரப்பு பேச்சுவார்த்தைகளில் இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சினைகள் பேசப்படாது என ரஷிய வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Related Tags :
Next Story