கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் முதல்-மந்திரிகளுடன் மோடி இன்றும், நாளையும் ஆலோசனை
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் முதல்-மந்திரிகளுடன் மோடி இன்றும், நாளையும் ஆலோசனை நடத்துகிறார்.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு இதுவரை 5 தடவை நீட்டிக்கப்பட்டு உள்ளது. 5-வது கட்டமாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு வருகிற 30-ந் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதற்கிடையே, மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கு தொடர்பான பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கிட்டத்தட்ட 3 மாதங்கள் ஆகப்போகிறது. என்றாலும் கொரோனா பரவல் கட்டுப்பட மறுக்கிறது. நாளுக்கு நாள் நோய்த்தொற்று பரவலும், உயிர் இழப்பும் அதிகரித்து வருகின்றன.
நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 32 ஆயிரத்தை தாண்டிவிட்டது. நேற்று ஒரு நாளில் மட்டும் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டனர். கொரோனாவுக்கு நேற்று 325 பேர் பலியானதை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,520 ஆக அதிகரித்து உள்ளது.
கொரோனா பரவல் தொடர்பாக பிரதமர் மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை உள்துறை மந்திரி அமித்ஷா, சுகாதார துறை மந்திரி ஹர்ஷ வர்தன் மற்றும் உயர் அதிகாரிகளுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, டெல்லியில் அதிகரித்து வரும் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து அந்த மாநில கவர்னர், முதல்-மந்திரி மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
4-வது கட்ட ஊரடங்கு முடிவடைவதற்கு முன்னதாக கடந்த மாதம் கடைசி வாரத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா அனைத்து மாநில முதல்-மந்திரிகளையும் தனித்தனியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
இந்த நிலையில் இன்றும் (செவ்வாய்க்கிழமை), நாளையும் பிரதமர் மோடி மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.
கொரோனா பரவலுக்கு பிறகு அவர் மாநில முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை மேற்கொள்வது இது 6-வது தடவை ஆகும். கடைசியாக கடந்த மாதம் 11-ந் தேதி ஆலோசனை நடத்தினார்.
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், முதல் நாளான இன்று பிற்பகலில் பஞ்சாப், கேரளா, கோவா, உத்தரகாண்ட், ஜார்கண்ட், வடகிழக்கு மாநிலங்களின் முதல்-மந்திரிகளுடனும் மற்றும் சில யூனியன் பிரதேசங்களின் துணை நிலை கவர்னர்களுடனும் மோடி ஆலோசனை மேற்கொள்கிறார்.
2-வது நாளான நாளை (புதன்கிழமை) கொரோனா பரவல் அதிகமாக உள்ள மராட்டியம், மேற்கு வங்காளம், டெல்லி, கர்நாடகம், குஜராத், பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 15 மாநிலங்களின் முதல்-மந்திரிகள் மற்றும் காஷ்மீர் துணை நிலை கவர்னர் ஆகியோருடன் ஆலோசனை நடத்த இருக்கிறார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேற்கொண்டு என்னென்ன நடவடிக்கைகளை எடுப்பது? என்பது குறித்து மாநில முதல்-மந்திரிகளுடன் ஆலோசிக்கும் மோடி, அவர்களுடைய கருத்துகளையும் கேட்டு அறிய இருக்கிறார்.
Related Tags :
Next Story