இந்திய வீரர்கள் மீது தாக்குதல்: சீன பொருட்களை புறக்கணிக்க மத்திய மந்திரிகள் அழைப்பு
இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக, சீன பொருட்களை புறக்கணிக்க மத்திய மந்திரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
புதுடெல்லி,
லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15-ந்தேதி இரவு இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். 18 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தில் சீனா தரப்பிலும் 35 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. சர்வதேச அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள இந்த மோதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சீனா மீது பெரும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் சீனாவுக்கு எதிரான போராட்டங்கள் நிகழ்ந்து வருகின்றன.
இது ஒருபுறம் இருக்க, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுப்பெற்று வருகின்றன. தற்போது மத்திய மந்திரிகளும் சீன பொருட்களை புறக்கணிக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
இது தொடர்பாக மத்திய உணவு மற்றும் நுகர்வோர் நலத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘சீனாவின் செயல்பாட்டை ஒவ்வொருவருக்கும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். சீன பொருட்களை நாம் புறக்கணிக்க வேண்டும். எனது அமைச்சக பயன்பாட்டுக்கு சீன பொருட்களை வாங்கக்கூடாது என அறிவுறுத்தி உள்ளேன். சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தர நிர்ணய விதிமுறைகளை கடுமையாக்க வேண்டும் என மத்திய அரசையும் கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறினார்.
நமது பாசுமதி அரசியை சீனா தடை செய்துள்ளதுடன், நமது பொருட்களுக்கு அங்கு தர பரிசோதனைகள் நடத்தப்படுவதாக கூறிய பஸ்வான், சீன தயாரிப்புகளுக்கு இந்தியாவில் கடுமையான தர பரிசோதனை நடத்தப்படுவது இல்லை என கவலை வெளியிட்டார்.
இதைப்போல மத்திய சமூக நலத்துறை இணை மந்திரி ராம்தாஸ் அதவாலே தனது டுவிட்டர் தளத்தில், ‘சீனா, துரோகம் செய்யும் ஒரு நாடு. சீன தயாரிப்பு பொருட்கள் அனைத்தையும் இந்தியா புறக்கணிக்க வேண்டும். சீன உணவுகளை தடை செய்வதோடு, அந்த உணவுப்பொருட்களை தயாரிக்கும் ஓட்டல்கள், உணவு விடுதிகள் அனைத்தையும் மூட வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டு உள்ளார்.
சீன பொருட்களுக்கு எதிராக நாடு முழுவதும் கோரிக்கைகள் வலுப்பெற்று வந்த நிலையில், இதற்கு மத்திய அரசில் அங்கம் வகிக்கும் மந்திரிகளே ஆதரவு தெரிவித்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Related Tags :
Next Story