இந்திய வீரர்களை நிராயுதபாணியாக அனுப்பியது ஏன்? - மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி


இந்திய வீரர்களை நிராயுதபாணியாக அனுப்பியது ஏன்? - மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி
x
தினத்தந்தி 19 Jun 2020 4:22 AM IST (Updated: 19 Jun 2020 4:22 AM IST)
t-max-icont-min-icon

லடாக் எல்லை பகுதிக்கு இந்திய வீரர்களை நிராயுதபாணிகளாக அனுப்பியது ஏன்? என்று மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

புதுடெல்லி, 

லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 5-ந் தேதி சீன ராணுவ வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் இடையே திடீரென்று மோதல் ஏற்பட்டது. கற்களாலும், கம்பிகளாலும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பில் 40-க்கும் மேற்பட்டோர் பலி ஆனார்கள்.

இது குறித்து நேற்று முன்தினம் டுவிட்டரில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., கிழக்கு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்களை கொன்ற சீனா பற்றி ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் குறிப்பிடாதது ஏன்? என்று கேள்வி எழுப்பியதோடு, இது மிகுந்த வேதனை அளிப்பதாகவும், இந்திய ராணுவத்தை அவமதிப்பதாக உள்ளது என்றும் கூறி இருந்தார்.

அத்துடன் இந்திய வீரர்கள் மரணம் அடைந்த போது பேரணியில் பேசிக் கொண்டிருந்தது ஏன்? என்றும், 2 நாட்கள் கழித்து இரங்கல் தெரிவித்தது ஏன்? என்றும் அவர் ராஜ்நாத் சிங்குக்கு கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்த நிலையில் ராகுல் காந்தி நேற்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்திய வீரர்களை நிராயுதபாணிகளாக அனுப்பியது ஏன்? என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார். அத்துடன், நிராயுதபாணிகளாக இருந்த இந்திய ராணுவ வீரர்களை கொல்ல சீனாவுக்கு எப்படி தைரியம் வந்தது? என்றும் அதில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

லடாக் எல்லையில் நமது வீரர்கள் 20 பேர் உயிர்த்தியாகம் செய்து இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சீனாவுக்கு இந்தியா கடுமையான எச்சரிக்கை விடுக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு பலவீனமான உத்தியை கையாளுகிறது. டெல்லி-மீரட் அதிவேக ரெயில் பாதை அமைக்கும் ஒப்பந்தத்தை சீன நிறுவனத்துக்கு வழங்கி இருப்பதன் மூலம் சீனாவிடம் மண்டியிட்டு இருக்கிறது. அந்த ரெயில் பாதை திட்டத்தை நிறைவேற்றும் திறன் இந்திய நிறுவனங்களுக்கு உள்ளது என்று அவர் கூறி உள்ளார்.

இந்தியா-சீனா இடையே எல்லையில் மோதல் நடந்து வரும் சூழ்நிலையில் டெல்லி-மீரட் அதிவேக ரெயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கான ரூ.1,126 கோடி ஒப்பந்தம் சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு இருப்பதாக ஊடகத்தில் வெளியான தகவலையும் தனது டுவிட்டரில் பிரியங்கா பகிர்ந்து கொண்டு உள்ளார்.


Next Story