ஒரே நாடு ஒரே கல்வி வாரியம் அமைக்க வேண்டும்-சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்


ஒரே நாடு ஒரே கல்வி வாரியம் அமைக்க வேண்டும்-சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
x
தினத்தந்தி 19 Jun 2020 8:54 PM GMT (Updated: 19 Jun 2020 8:54 PM GMT)

சீரான கல்வியை வழங்குவதற்காக, ஒரே நாடு ஒரே கல்வி வாரியம் என்ற அமைப்பை நிறுவ வேண்டும் என பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நாடுமுழுவதும் அனைத்து மாணவர்களுக்கும் சீரான கல்வியை வழங்குவதற்காக, ஒரே நாடு ஒரே கல்வி வாரியம் என்ற அமைப்பை நிறுவ மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி பா. ஜனதா தலைவரும், வக்கீலுமான அஸ்வினிகுமார் உபாத்யாய் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், நாடு முழுவதும் 6 வயது முதல் 14 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் பொதுவான பாடத்திட்டங்கள் மற்றும் பாடங்கள் கொண்ட சீரான கல்வியை வழங்க வேண்டும். இதற்காக, இந்திய இடைநிலை கல்வி வாரிய சான்றிதழ் மற்றும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் ஆகியவற்றை இணைத்து ஒரே நாடு ஒரே கல்வி வாரியம் அமைக்கப்பட வேண்டும். இதற்காக ஜி.எஸ்.டி.போல தேசிய அளவில் கல்வி கவுன்சில் அமைப்பை உருவாக்கலாம்.

சமூக, பொருளாதார, சமத்துவம் மற்றும் நீதியை அடைவதற்கு தனியார் நிர்வகிக்கும் பள்ளிகளாக இருந்தாலும் சரி, மத்திய மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தால் நடத்தப்படும் பள்ளிகளாக இருந்தாலும் சரி அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் ஒரே பாடத்திட்டம் உருவாக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story