பூரி ஜெகன்நாதர் ஆலய ரத யாத்திரை தடை உத்தரவுக்கு எதிரான மனு - உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை


பூரி ஜெகன்நாதர் ஆலய ரத யாத்திரை தடை உத்தரவுக்கு எதிரான மனு - உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை
x
தினத்தந்தி 21 Jun 2020 8:48 PM IST (Updated: 21 Jun 2020 8:48 PM IST)
t-max-icont-min-icon

பூரி ஜெகன்நாதர் ஆலய ரத யாத்திரைக்கு தடை விதித்த உத்தரவுக்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்கிறது.

புதுடெல்லி,

ஒடிசா மாநிலத்தில் உள்ள புரி ஜெகநாதர் ஆலயத்தின் ரத யாத்திரை வரும் ஜூன் 23-ந் தேதி நடைபெற இருந்தது. கொரோனா பரவல் காரணமாக, இந்த யாத்திரையை தள்ளி வைக்க வேண்டும் என ஒடிஷா விகாஸ் பரிஷத் என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் இந்த யாத்திரை விழாவை தற்போது நடத்தினால் ஏராளமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என அந்த தொண்டு நிறுவனம் அளித்த மனுவில் கூறப்பட்டிருந்தது. கடந்த 18-ந் தேதி இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஜெகநாதர் ஆலய ரத யாத்திரைக்கு தடை விதித்தது உத்தரவிட்டது.

“இந்த யாத்திரையை நடத்த அனுமதித்தால் ஜெகன்நாதர் நம்மை மன்னிக்கமாட்டார். தற்போதைய கொரோனா சூழலில் ஏராளமான மக்கள் கூடுவதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. மக்களின் நலன் கருதி இந்த ரத யாத்திரைக்கு தடை விதிக்கப்படுகிறது” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் நீதிபதிகளின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பூரி ஜெகன்நாதர் ஆலயத்தின் சங்கராச்சாரியர் சுவாமி நிஸ்சாலந்த சரஸ்வதி, ஆலயத்தின் ரத யாத்திரையை நடத்துவதற்கான பாதுகாப்பு திட்டங்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை(திங்கள்கிழமை) நீதிபதி ரவீந்திர பட் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது. 

Next Story