தாயாரின் மருத்துவ செலவுகளுக்காக கொரோனா நோயாளி உடல்களை தகனம் செய்யும் பள்ளி மாணவன்
தாயாரின் மருத்துவ செலவுகளுக்காக கொரோனாவால் இறந்த உடல்களை தகனம் செய்யும் பணியில் 12ம் வகுப்பு மாணவன் ஈடுபட்டு உள்ளான்.
புதுடெல்லி,
டெல்லியின் வடகிழக்கே உள்ள சீலாம்பூரில் வசித்து வரும் மாணவன் சந்த் முகமது. அங்குள்ள பள்ளியொன்றில் 12ம் வகுப்பு படித்து வருகிறான்.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பினை தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவால் இவரது மூத்த சகோதரனுக்கு வேலை இல்லாமல் போனது. இவருக்கு 3 சகோதரிகள் உள்ளனர். அவர்களும் பள்ளியில் படித்து வருகின்றனர். இவரது தாயாருக்கு தைராய்டு பாதிப்பு இருந்துள்ளது. அதனால் அவசரம் ஆக அவருக்கு மருந்துகள் தேவைப்பட்டன.
இதேபோன்று 4 பேருக்கும் பள்ளி கட்டணம் செலுத்த வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது. ஆனால், கைவசம் பணம் இல்லை. இதனால், அவர் டெல்லியிலுள்ள லோக் நாயக் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக சேர்ந்துள்ளார்.
அவருக்கு கொரோனா பாதிப்பில் உயிரிழந்த உடல்களை தகனம் செய்யும் பணி வழங்கப்பட்டு உள்ளது. இதுபற்றி முகமது கூறும்பொழுது, உலகில் இப்போதுள்ள மிக ஆபத்து நிறைந்த பணியில் எனக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.17 ஆயிரம் சம்பளம் கிடைக்கும். எனது முதல் சம்பளம் 4 பேருக்கு தேவையான பள்ளி கட்டணம் செலுத்துவதற்கு போதிய அளவில் இருக்கும். தாயாரின் மருத்துவ செலவுகளுக்கும் உதவும் என கூறினார்.
முகமது தனது பள்ளி கட்டணத்திற்காக கடன் பெற நம்பிக்கையுடன் முயன்றுள்ளார். முடிவில் இந்த பணியில் சேரவேண்டிய கட்டாயத்திற்கு ஆளானேன் என கூறுகிறார்.
Related Tags :
Next Story