ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகளை ஊடுருவ செய்ய பாகிஸ்தான் முயற்சி; காஷ்மீர் டி.ஜி.பி. பேட்டி
இந்தியாவுக்குள் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகளை ஊடுருவுவதற்கு பாகிஸ்தான் முயற்சி செய்து வருகிறது என காஷ்மீர் டி.ஜி.பி. பேட்டியில் கூறியுள்ளார்.
ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் எல்லை பகுதியில் பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதல் இந்த ஆண்டு அதிகரித்து உள்ளது. இதன்படி, ஆண்டு தொடக்கத்தில் இருந்து கடந்த 10ந்தேதி வரை, போர்நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறி இந்தியா மீது அந்நாட்டு ராணுவம் 2,027 முறை பீரங்கி தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இந்நிலையில், காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் கிருஷ்ண கதி மற்றும் ரஜோரி நவ்ஷேரா பிரிவுகளில் அமைந்துள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு மற்றும் கத்துவா மாவட்டத்தில் அமைந்துள்ள சர்வதேச எல்லை பகுதிகளில் திடீரென சிறிய ரக ஆயுதங்கள் மற்றும் சிறிய ரக பீரங்கிகளை கொண்டு பாகிஸ்தான் ராணுவம் நேற்று அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
இதில் நவ்ஷேரா பகுதியில் இந்திய நிலைகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த இந்திய வீரர் ஒருவர் பலத்த காயமுற்றார். பின்னர் அவர் உயிரிழந்து விட்டார். இந்த மாத தொடக்கத்தில் இருந்து இதுவரை ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் கொல்லப்பட்ட 4வது நபர் இவராவார்.
கடந்த 4 மற்றும் 10 ஆகிய தேதிகளில் ரஜோரி மாவட்டத்தில் 2 வீரர்களும், கடந்த 14ந்தேதி பூஞ்ச் மாவட்டத்தில் வீரர் ஒருவரும் கொல்லப்பட்டனர்.
இதனை தொடர்ந்து காஷ்மீரின் புல்வாமாவில் இன்று நடந்த தாக்குதலில் சி.ஆர்.பி.எப்.பின் தலைமை காவலர் காலே சுனில் என்பவர் உயிரிழந்து உள்ளார். இந்நிலையில், காஷ்மீர் டி.ஜி.பி. தில்பாக் சிங் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, பாதுகாப்பு படைகள் மீது அதிக சக்தி வாய்ந்த வெடிகுண்டை (ஐ.ஈ.டி.) பயன்படுத்தி மற்றொரு தாக்குதலை நடத்த ஜெய்ஷ் இ முகமது இயக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டு உள்ளனர் என எங்களுக்கு தகவல் கிடைத்து உள்ளது.
இந்தியாவுக்குள் ஜெய்ஷ் இ முகமது மற்றும் லஷ்கர் இ தைபா ஆகிய பயங்கரவாத இயக்கங்களை சேர்ந்த பயங்கரவாதிகள் பலரை, நவ்ஷேரா, ரஜோரி-பூஞ்ச் மற்றும் குப்வாரா-கேரான் பிரிவுகள் வழியாக காஷ்மீருக்குள் ஊடுருவ செய்ய பாகிஸ்தான் அரசு முயற்சி செய்து வருகிறது. நமது எல்லை பகுதிகள் உஷார்படுத்தப்பட்டு உள்ளன. ஒருங்கிணைப்புடன் நாம் செயல்பட்டு வருகிறோம் என்று அவர் கூறினார்.
Related Tags :
Next Story