கொரோனா பரிசோதனை மாதிரிகளை டாக்டர்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்ற உத்தரவு வாபஸ் - ஐகோர்ட்டில் மத்திய அரசு பதில் மனு


கொரோனா பரிசோதனை மாதிரிகளை டாக்டர்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்ற உத்தரவு வாபஸ் - ஐகோர்ட்டில் மத்திய அரசு பதில் மனு
x
தினத்தந்தி 2 July 2020 3:13 AM IST (Updated: 2 July 2020 3:13 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரிசோதனை மாதிரிகளை டாக்டர்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்ற உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக ஐகோர்ட்டில் மத்திய அரசு பதில் மனு அளித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக டெக்னீசியன் சங்கம், சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தது. அதில், ‘கொரோனா பரிசோதனை மாதிரிகளை காது, மூக்கு தொண்டை டாக்டர்கள், மருத்துவ மேற்படிப்பு பயிற்சி டாக்டர்கள் மூலமே எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதை மீறி லேப் டெக்னீசியன்களை மாதிரி எடுக்க நிர்பந்திக்கின்றனர். இதற்கு தடை விதிக்க வேண்டும். டாக்டர்கள் மூலம் மாதிரிகளை எடுக்க உத்தரவிட வேண்டும்‘ என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கிற்கு தமிழக அரசு அளித்த பதில் மனுவில், டாக்டர்கள் மட்டுமல்லாமல், லேப் டெக்னீசியன்களும் மாதிரிகளை எடுக்கும் பணியில் ஈடுபட வேண்டும்‘ என்று கூறியிருந்தது. இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனைக்கான மாதிரிகளை காது, மூக்கு தொண்டை சிகிச்சை வழங்கும் டாக்டர்கள், மருத்துவ மேற்படிப்பு பயிற்சி டாக்டர்கள் தான் எடுக்க வேண்டும் என்று கடந்த ஏப்ரல் 8-ந்தேதி மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால், கொரோனா வைரஸ் தொற்று பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இந்த உத்தரவை கடந்த ஏப்ரல் 13-ந்தேதி திரும்பப் பெற்று மற்றொரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கை இன்று (வியாழக்கிழமை) விசாரிப்பதாக ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் உத்தரவிட்டனர்.

Next Story