தானே மாவட்டத்தில் 3 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு - 10 நாட்கள் அமலில் இருக்கும்
தானே மாவட்டத்தில் 3 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்து உள்ளது.
மும்பை,
தானே மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அசுர வேகத்தில் பரவி வருகிறது. தானே மாவட்டத்தில் இதுவரை 34 ஆயிரத்து 646 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,094 பேர் பலியாகி உள்ளனர். எனவே மாவட்டத்தில் நோய் பரவலை தடுக்க கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக இந்த மாவட்டத்தில் உள்ள தானே, கல்யாண்- டோம்பிவிலி, மிரா பயந்தர் ஆகிய 3 மாநகராட்சி பகுதிகளில் நேற்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த முழு ஊரடங்கு வருகிற 12-ந்தேதி காலை 7 மணி வரை 10 நாட்கள் அமலில் இருக்கும்.
முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர முடியும்.
இது குறித்து கல்யாண்- டோம்பிவிலி மாநகராட்சி கமிஷனர் விஜய் சூரியவன்சி கூறுகையில், ‘‘கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க விரும்புகிறோம். அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு இந்த ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
தானே மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘ஊரடங்கின் போது நகர பஸ்கள், ஆட்டோ, டாக்சி, வாடகை கார்கள் செயல்பட அனுமதி இல்லை. மருத்துவ தேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. டாக்சியில் நோயாளியுடன் ஒருவர் மட்டுமே பயணம் செய்ய முடியும். வங்கிகள், ஏ.டி.எம். மையங்கள், ஐ.டி. நிறுவனங்கள், தபால் துறையினர், இணையதள சேவை பிரிவினருக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
ஊரடங்கு குறித்து தானே மாவட்ட கலெக்டர் ராஜேஸ் நர்வேகர் கூறியதாவது:-
ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு சாலைகள், சந்தை பகுதிகள், பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் சுகாதாரத்துறையினர், போலீசார், மாவட்ட நிர்வாகத்துக்கு அதிக சுமை ஏற்பட்டுள்ளது. எனவே தான் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நவிமும்பை மற்றும் பன்வெல் மாநகராட்சி பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல்முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.
Related Tags :
Next Story