நாய் இறைச்சி விற்பனைக்கு தடை விதித்தது நாகலாந்து !


நாய் இறைச்சி விற்பனைக்கு தடை விதித்தது நாகலாந்து !
x
தினத்தந்தி 4 July 2020 8:23 AM IST (Updated: 4 July 2020 10:11 AM IST)
t-max-icont-min-icon

நாகலாந்தில் நாய்களை இறைச்சிக்காக விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

திம்பூர்,

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று நாகலாந்து. இம்மாநிலத்தில் நாய்களின் இறைச்சிகளை உணவுப்பொருளாக பயன்படுத்தும் வழக்கம் சில குறிப்பிட்ட மக்களிடம் காணப்படுகிறது. இதற்காக, மேற்கு வங்காளம் உள்பட பிற அண்டை மாநிலங்களில் இருந்து நாய்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. ஒரு நாய் ரூ.50 வரை அண்டை மாநிலங்களில் இருந்து வாங்கப்படுவதாக கூறப்படுகிறது.

 இந்த நிலையில், நாகலாந்தில் உள்ள திமாப்பூர் சந்தையில் நாய்கள் விற்பனை செய்யப்படுவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. குறிப்பாக  சாக்கு பை ஒன்றில் நாய் ஒன்றின் வாயை கட்டிவைத்தபடி ஒருவர் கொண்டு சென்ற படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து, நாய்கள் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக கோரிக்கைகள் வலுத்தன.  

விலங்குகள் பாதுகாப்பு அமைப்புகளும் மாநில அரசுகளுக்கு பல்வேறு மனுக்களை அனுப்பின.  இதன் தொடர்ச்சியாக  நாய் இறைச்சி விற்பனைக்கு தடை விதிப்பதாக நாகலாந்து அரசு அறிவித்துள்ளது. நாகலாந்து தலைமைச்செயலாளர் பிறப்பித்த உத்தரவில்,   நாய் இறைச்சி ஏற்றுமதி, நாய் இறைச்சி சந்தைகள், சமைக்கப்பட்ட நாய் இறைச்சி உள்ளிட்டவற்றுக்கும்  தடை விதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 371 (ஏ) பிரிவின் கீழ் நாகாலாந்துக்கு சில சிறப்பு விதி விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. இதன்படி, மாநில மக்களின் பாரம்பரிய பழக்கங்களை பாதுகாக்க சட்டம் வகை செய்கிறது.  இதனால், பாராளுமன்ற சட்டங்கள் இந்த விவகாரத்தில் அம்மாநிலத்திற்கு நேரடியாக பொருந்தாது.


Next Story