ரூ.3 லட்சம் மதிப்பிலான தங்க முக கவசம் அணிந்து நகர்வலம் வரும் நபர்


ரூ.3 லட்சம் மதிப்பிலான தங்க முக கவசம் அணிந்து நகர்வலம் வரும் நபர்
x
தினத்தந்தி 4 July 2020 5:47 PM IST (Updated: 4 July 2020 5:47 PM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலான தங்க முக கவசம் ஒன்றை அணிந்து கொண்டு நபர் ஒருவர் நகர்வலம் வருகிறார்.

புனே,

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணிதல் உள்ளிட்ட ஊரடங்கு விதிகளை பின்பற்றும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.  நாட்டில் கொரோனா பாதிப்பில் மராட்டியம் முதல் இடம் வகிக்கின்றது.

மராட்டியத்தின் புனே நகரில் பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில் வசித்து வருபவர் சங்கர் குராடே.  இவர் தங்க முக கவசம் ஒன்றை அணிந்துள்ளார்.  இதன் மதிப்பு ரூ.2.89 லட்சம் ஆகும்.  தங்க நகைகளை அணிவதில் ஆர்வமுள்ள இவர் தனது அனைத்து விரல்களிலும், மோதிரங்கள் அணிந்துள்ளார்.

அதனுடன், தங்க பிரேஸ்லெட்டுகள் மற்றும் பெரிய தங்க சங்கிலிகளையும் அணிந்துள்ளார்.  முக கவசம் அணிவது கட்டாயம் என அரசு அறிவித்துள்ள நிலையில், அதனையும் தங்கத்திலேயே செய்து அணிந்துள்ளார்.  இதுபற்றி அவர் கூறும்பொழுது, கோல்ஹாபூரில் ஒருவர் வெள்ளி முக கவசம் அணிந்திருந்த வீடியோ ஒன்றை சமூக ஊடகத்தில் கவனித்தேன்.

அதனால், தங்க முக கவசம் அணியும் எண்ணம் எனக்குள் உதித்தது.  இதனை தங்கநகை ஆசாரியிடம் கூறினேன்.  ஒரு வாரத்தில் ஐந்தரை பவுண்டு எடை கொண்ட இந்த முக கவசம் தயாரானது.  இதில் சிறிய துளைகள் உள்ளன.  அதனால் சுவாசிப்பதற்கு எந்த சங்கடமும் இல்லை.

இந்த தங்க முக கவசம் அணிவதனால் எனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு வருமா? அல்லது வராதா? என்பது பற்றி எனக்கு தெரியாது.  ஆனால் அரசின் அனைத்து விதிகளையும் பின்பற்றினால், கொரோனா வைரஸ் பரவலை தடுத்து விடலாம் என கூறியுள்ளார்.

Next Story