சீனா ஆக்கிரமிப்பு லடாக் மக்களின் எச்சரிக்கையை மத்திய அரசு புறக்கணிக்கிறது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு


சீனா ஆக்கிரமிப்பு லடாக் மக்களின் எச்சரிக்கையை மத்திய அரசு புறக்கணிக்கிறது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 5 July 2020 4:39 AM IST (Updated: 5 July 2020 4:39 AM IST)
t-max-icont-min-icon

சீனா ஆக்கிரமிப்பு பற்றி லடாக் மக்கள் விடுக்கும் எச்சரிக்கையை மத்திய அரசு புறக்கணிப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

புதுடெல்லி,

லடாக் எல்லையில் சீன ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்ததை தொடர்ந்து, மத்திய அரசின் நடவடிக்கைகளை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கடுமையாக விமர்சித்து வருகிறார். அந்த கட்சியின் மற்ற தலைவர்களும் மத்திய அரசின் செயல்பாடுகளை கண்டித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் லடாக் எல்லைப் பகுதிக்கு சென்று அங்குள்ள நிலவரங்களை ஆய்வு செய்த பிரதமர் மோடி ராணுவ வீரர்கள் மத்தியில் பேசுகையில், லடாக்கில் பயங்கரவாதத்தை உருவாக்க முயன்ற எதிரிகளின் சதி தேசபக்தி கொண்ட மக்களால் முறியடிக்கப்பட்டு இருப்பதாகவும், நமது ராணுவத்துக்கு லடாக் மக்கள் ஆதரவாக இருப்பதாகவும் கூறினார்.

இந்த சூழ்நிலையில், மத்திய அரசை குற்றம்சாட்டும் வகையில் ராகுல் காந்தி ‘டுவிட்டர்‘ பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், நாட்டுப்பற்று கொண்ட லடாக் மக்கள் சீனாவின் ஊடுருவல் குறித்து குரல் எழுப்பி அரசை எச்சரிப்பதாகவும், ஆனால் அந்த எச்சரிக்கையை மத்திய அரசு புறக்கணிப்பதாகவும், இதற்கான விலையை இந்தியா கொடுக்க வேண்டி இருக்கும் என்றும் அவர் கூறி உள்ளார்.

இந்தியாவின் நலனுக்காக தயவு செய்து அவர்கள் சொல்வதை கேளுங்கள் என்றும் மத்திய அரசை அவர் கேட்டுக் கொண்டு இருக்கிறார்.

இந்திய பகுதியை சீனா ஆக்கிரமித்து இருப்பது பற்றி லடாக்கை சேர்ந்த சிலர் கூறியதாக ஊடகங்களில் வெளியான செய்தியையும் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில் பகிர்ந்து கொண்டு உள்ளார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “தாய்நாட்டின் மீது பற்று கொண்ட ஏராளமான லடாக் மக்கள் சீனா தங்கள் நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டதாக கூறுகிறார்கள். அவர்கள் சொல் வதை கேட்டு, அவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து தாய் மண்ணை பாதுகாக்க இந்திய அரசு முன்வர வேண்டும்“ என்று கூறி உள்ளார்.

சீன ராணுவம் இந்திய நிலப்பகுதியை ஆக்கிரமித்து இருப்பதாகவும், கடந்த 2 மாதங்களாக சீன ராணுவத்தின் செயல்பாடுகள் அதிகரித்து இருப்பதாகவும் லடாக்கைச் சேர்ந்த ஒருவர் கூறியுள்ள வீடியோ பதிவு ஒன்றையும் பிரியங்கா தனது டுவிட்டர் பதிவுடன் இணைத்து இருக்கிறார்.

Next Story