சத்தீஷ்காரில் பயங்கரம் ஏ.டி.எம். காவலாளியை சுட்டுக்கொன்று ரூ.14½ லட்சம் கொள்ளை


சத்தீஷ்காரில் பயங்கரம் ஏ.டி.எம். காவலாளியை சுட்டுக்கொன்று ரூ.14½ லட்சம் கொள்ளை
x
தினத்தந்தி 5 July 2020 4:49 AM IST (Updated: 5 July 2020 4:49 AM IST)
t-max-icont-min-icon

சத்தீஷ்காரில் ஏ.டி.எம். காவலாளியை சுட்டுக்கொன்று ரூ.14½ லட்சத்தை கொள்ளையடித்த பீகார் வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராய்கர்,

சத்தீஷ்கார் மாநிலத்தின் ராய்கார் மாவட்டம் கிரோதிமார்நகரில் உளள் அசோக் சவுக் பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்குள்ள ஏ.டி.எம்.மில் பணம் நிரப்புவதற்காக தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த காவலாளிகள் அரவிந்த் படேல், வினோத் படேல் ஆகியோர் நேற்று முன்தினம் மதியம் 2 மணிக்கு வந்தனர். ஏ.டி.எம். மையத்திற்குள் நுழைந்த அவர்கள், எந்திரத்தை திறந்து பணம் நிரப்பும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்திறங்கிய 2 வாலிபர்கள், ஏ.டி.எம். மையத்திற்குள் நுழைந்து கண் இமைக்கும் நேரத்தில் காவலாளிகள் 2 பேரையும் துப்பாக்கியால் சுட்டனர். பின்னர் பையில் இருந்த ரூ.13 லட்சம் மற்றும் ஏ.டி.எம். எந்திர பணப்பெட்டியில் இருந்த ரூ.1½ லட்சத்தையும் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

துப்பாக்கி சூட்டில் அரவிந்த் படேல் என்ற காவலாளி இறந்து விட்டார். வினோத் படேல் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுபட்டவர்களை பிடிக்க 8 தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் தேடும் பணியும் நடந்தது.

இதற்கிடையே கெராஜர் என்ற கிராமத்தில் பதுங்கி இருந்த கொள்ளையர்கள் சுதிர்குமார் (20), பிந்துவர்மா(19) ஆகியோரை போலீசார் கைது செய்து, பணத்தையும், துப்பாக்கியையும் மீட்டனர். இருவரும் பீகாரைச் சேர்ந்தவர்கள். ஏ.டி.எம். பணத்தை கொள்ளையடிக்க 15 நாட்களாக நோட்டமிட்டு வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கொள்ளை நடந்த 10 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story