சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் குற்றவாளியான முன்னாள் எம்.எல்.ஏ. கொரோனாவுக்கு பலி


சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் குற்றவாளியான முன்னாள் எம்.எல்.ஏ. கொரோனாவுக்கு பலி
x

சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் குற்றவாளியான முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்தர் யாதவ் கொரோனா பாதிப்புக்கு பலியாகி உள்ளார்.

புதுடெல்லி,

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சுட்டு கொல்லப்பட்ட வழக்கில், அவரது சீக்கிய பாதுகாவலர்கள் கைது செய்யப்பட்டு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.  இதனை தொடர்ந்து, கடந்த 1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக பெரும் கலவரம் வெடித்தது.

இந்த கலவரத்தில் டெல்லியில் 2 ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட சீக்கியர்களும், நாடு முழுவதும் 3 ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட சீக்கியர்களும் கொல்லப்பட்டனர்.  இதுபற்றிய வழக்கில் பலர் கைது செய்யப்பட்டனர்.  இந்த வழக்கு விசாரணையில், வன்முறையை தூண்டிவிட்டவர்கள், நேரடியாக வன்முறையில் ஈடுபட்டவர்கள் என பலர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

அவர்களில், பாலம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்தர் யாதவ் (வயது 70) என்பவரும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அவர் மண்டோலி சிறையில் அறை எண் 14ல் அடைக்கப்பட்டார்.  இந்நிலையில், சிறையில் இருந்த மகேந்தருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.  இதனால் அவர் கடந்த ஜூன் 26ந்தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இதில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார்.  இதனை டெல்லி சிறை துறை இயக்குனர் சந்தீப் கோயல் இன்று உறுதி செய்துள்ளார்.  

இதே அறை எண் 14ல் அடைக்கப்பட்டிருந்த மற்றொரு குற்றவாளியான கன்வர் சிங் என்பவர் கொரோனா பாதித்து கடந்த மாதம் 15ந்தேதி தூக்கத்திலேயே உயிரிழந்து விட்டார்.  இதனால் மகேந்தர், டெல்லி மண்டோலி சிறையில் கொரோனாவுக்கு உயிரிழந்த 2வது நபர் ஆவார்.

Next Story