கல்வான் விவகாரம்; இந்திய மருமகளான சீன பெண் கண்ணீர் பேட்டி
இந்தியா மற்றும் சீனா மோதலால் பீகாரில் வசிக்கும் சீன பெண் ஒருவர் கண்ணீர் வடித்துள்ளார்.
பாட்னா,
லடாக் எல்லையில் கடந்த ஜூன் 15ந்தேதி சீன ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். இதேபோன்று சீன தரப்பிலும் 40 வீரர்கள் பலியாகினர். ஆனால், இதனை சீனா உறுதிப்படுத்தவில்லை.
இந்தியா மற்றும் சீனா இடையே மோதல் ஏற்பட்டபொழுது, பீகாரில் வசிக்கும் சீன பெண் ஒருவர் கண்ணீர் வடித்துள்ளார்.
பீகாரின் நவ நாளந்தா மகாவிகார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் அருண் குமார் யாதவ். இவரது மனைவி யீன் ஹா. சீனாவை சேர்ந்த யீன், இந்திய மருமகளானது சுவாரசியம் நிறைந்த கதை. கடந்த 2011ம் ஆண்டில், இந்தோ-சீனா ஸ்காலர்ஷிப்பின் கீழ் மாண்டரின் மொழியை கற்க சீனாவுக்கு அருண் சென்றுள்ளார்.
அவர் படிக்கும்பொழுது, யீனுடன் நட்பு ஏற்பட்டு பின் காதலாக மாறியது. கடந்த 2016ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆரம்பத்தில் யீனின் தந்தை இவர்களது திருமணத்திற்கு தயக்கம் காட்டியுள்ளார். தனது மகள் தொலைதூரத்தில் வசிப்பதற்கு தயங்கிய அவர், பின்னர் சம்மதித்துள்ளார்.
இந்த தம்பதிக்கு 3 வயதில் ‘மைத்ரேயா’ என்ற மகன் உள்ளார். இதற்கு நட்பு என்று அர்த்தம். யீன் நாளந்தாவில் பாலி மொழியில் முனைவர் பட்டத்திற்கான படிப்பு படித்து வருகிறார்.
இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலின்பொழுது கண்ணீர் வடித்த யீன் இதுபற்றி நாளிதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், ‘இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே ஏற்படும் மோதல், எனது பெற்றோருக்கும், புகுந்த வீட்டு உறவினர்களுக்கும் இடையே ஏற்படும் மோதல் போன்றது.
கல்வான் பள்ளத்தாக்கு மோதல் என்னை மனதளவில் பாதித்தது. கடவுள் புத்தரின் கொள்கைகளை தீவிரமுடன் பின்பற்றுபவள் நான். உண்மை, அமைதி மற்றும் அகிம்சை ஆகிய புத்தரின் போதனைகளை சீனா உள்பட உலகம் முழுவதும் பரப்பியது இந்தியா என நான் உணருகிறேன்’ என கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர், ‘இரு நாடுகளும் அமைதி மற்றும் நட்புறவை ஊக்குவிக்கிறது. இரு நாடுகளும் புத்தரின் தீவிர பற்றாளர்கள். ஆசியாவின் பெரிய நாடுகள். சீனர்கள், இந்தியர்களுக்கு அதிக மரியாதை அளிக்கின்றனர். அதனை அவர்களும் பெறுகின்றனர். கலாசாரம் மற்றும் எண்ணத்தின் அடிப்படையில் இந்தியாவை நெருங்கிய நாடு சீனா. ஆசியாவின் இரு பெரிய நாடுகளும் கைகோர்த்து செயல்பட்டால் உலக அளவில் உருமாற்றம் ஏற்படும்’ என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story