ஜார்கண்ட் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் உடல்களை தகனம் செய்ய எதிர்ப்பு கல்வீச்சில் 3 பேர் காயம்


ஜார்கண்ட் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் உடல்களை தகனம் செய்ய எதிர்ப்பு கல்வீச்சில் 3 பேர் காயம்
x
தினத்தந்தி 6 July 2020 3:30 AM IST (Updated: 6 July 2020 3:06 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் கொரோனாவுக்கு பலியான டாக்டர் உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டம் மற்றும் வன்முறை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜாம்ஷெட்பூர்,

சென்னையில் கொரோனாவுக்கு பலியான டாக்டர் உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டம் மற்றும் வன்முறை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுபோன்ற சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்று உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் மாவட்டத்தில் சாக்‌ஷியை சேர்ந்த 88 வயது பெண் ஒருவரும், சோனாரியை சேர்ந்த 71 வயது ஆண் ஒருவரும் கொரோனாவுக்கு பலியானார்கள்.

அந்த மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானோர் உடல்களை புய்யாந்தி என்ற இடத்தில் ஸ்வர்ணரேகா ஆற்றங்கரையில் உள்ள சுடுகாட்டில் தகனம் செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவு செய்திருந்தது. அதற்கு எதிர்ப்பு எழக்கூடும் என்று கருதி, நேற்று முன்தினமே அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். நேற்று போலீசாருக்கு முழு உடல் பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்பட்டன. கொரோனாவுக்கு பலியான 2 பேரின் உடல்களுடன் சற்று நேரத்தில் வாகனம் வந்தது. அதே சமயத்தில், அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமானோர் அங்கு திரண்டு வந்தனர்.

அங்கு உடல்களை தகனம் செய்தால், தங்கள் பகுதியில் கொரோனா பரவி விடும் என்று கூறி, தகனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை சமாதானப்படுத்த அதிகாரிகள் முயன்றும் அவர்கள் ஏற்கவில்லை. நிலைமை கட்டுப்பாட்டை மீறி சென்றபோது, திடீரென பெண்கள் உள்ளிட்டோர் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதில், ஒரு பெண் போலீஸ் உள்பட 3 பேர் காயமடைந்தனர். இதையடுத்து, போலீசார் தடியடி நடத்தி கும்பலை கலைத்தனர். பிறகு 2 உடல்களும் தகனம் செய்யப்பட்டன.

Next Story