தினமும் 3 லட்சம் பேருக்கு பரிசோதிக்கப்படுகிறது: இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 1 கோடியை தாண்டியது


தினமும் 3 லட்சம் பேருக்கு பரிசோதிக்கப்படுகிறது: இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 1 கோடியை தாண்டியது
x
தினத்தந்தி 7 July 2020 5:30 AM IST (Updated: 7 July 2020 4:00 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 1 கோடியை தாண்டியது. 1,105 ஆய்வுக்கூடங்கள் மூலம் தினமும் 3 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு பரிசோதனை நடந்து வருகிறது.

புதுடெல்லி,

இந்தியாவில் மின்னல் வேகத்தில் பரவி வரும் கொரோனாவுக்கு நூற்றுக்கணக்கான உயிர்கள் தினமும் மடிகின்றன. புதிய நோயாளிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து 20 ஆயிரத்தை தாண்டி உச்சம் தொடுகிறது.

தொடக்கத்தில் சில நூறுகளில் இருந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது சில பத்தாயிரங்களை எட்டியிருப்பதற்கு, கொரோனா பரவலின் வேகம் ஒருபுறம் காரணமாக இருந்தாலும், மறுபுறம் பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்து இருப்பதும் ஒரு காரணம் ஆகும். அந்தவகையில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிப்பதில் மத்திய அரசு வேகம் காட்டுகிறது.

குறிப்பாக கொரோனாவை தடுப்பதில் தீவிரம் காட்டி வரும் மத்திய அரசு, ‘பரிசோதித்தல்-தொடர்புடையவர்களை கண்டறிதல்-சிகிச்சை அளித்தல்’ என்ற மந்திரத்தை வலியுறுத்தி மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை மத்திய அரசு முடுக்கி விட்டு உள்ளது.

மேலும் சிறப்பு முகாம்கள், நடமாடும் சோதனை வாகனங்கள் மூலமும் பரிசோதனைகளை நடத்தவும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று பரிசோதிக்கவும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இதன் பலனாக கொரோனா பரிசோதனை எண்ணிக்கை நாளும் அதிகரித்து உள்ளது.

அதேநேரம் நாடு முழுவதும் பரிசோதனைக்கூடங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதலில் மும்பையில் உள்ள தேசிய வைரஸ் பரிசோதனை மற்றும் தடுப்பு மையம் என்ற ஒற்றை பரிசோதனைக்கூடத்தில் மட்டுமே கொரோனா பரிசோதிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று 1,105 பரிசோதனைக்கூடங்கள் நாடு முழுவதும் இரவு-பகலாக இயங்கி வருகின்றன. இதில் 317 ஆய்வுக்கூடங்கள் தனியாருக்கு சொந்தமானவை ஆகும்.

இந்த ஆய்வுக்கூடங்கள் மூலமாக தினந்தோறும் பரிசோதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தற்போது 3 லட்சத்தை கடந்திருக்கிறது.

கடந்த மே 25-ந்தேதி நிலவரப்படி தினசரி பரிசோதனை எண்ணிக்கை 1.5 லட்சமாக இருந்தது. இது அடுத்த ஒரு மாதத்தில் இரு மடங்காக அதிகரித்து இருப்பது கொரோனாவுக்கு எதிரான போரில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக கருதப்படுகிறது.

இவ்வாறு தினமும் லட்சக்கணக்கான பரிசோதனைகள் நடத்தப்பட்டதன் பலனாக, நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை எண்ணிக்கை நேற்று 1 கோடியை கடந்தது. நேற்று காலை 11 மணி நிலவரப்படி 1 கோடியே 4 ஆயிரத்து 101 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு இருப்பதாக இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) விஞ்ஞானியும், ஊடக ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் லோகேஷ் சர்மா கூறினார்.

Next Story