பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டங்களில் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை பா.ஜனதா புதிய குற்றச்சாட்டு


பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டங்களில் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை பா.ஜனதா புதிய குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 7 July 2020 4:16 AM IST (Updated: 7 July 2020 4:16 AM IST)
t-max-icont-min-icon

பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டங்களில் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை என பா.ஜனதா புதிய குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளது.

புதுடெல்லி,

லடாக் மோதல் தொடர்பாக ஆளும் பா.ஜனதாவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குறை கூறி வருகிறார். இதற்கு பா.ஜனதாவும் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த நிலையில், நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக கேள்வி எழுப்பி வரும் ராகுல் காந்தி, பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டங்களில் பங்கேற்கவில்லை என நேற்று புதிய குற்றச்சாட்டு ஒன்றை ராகுல் மீது பா.ஜனதா கூறியுள்ளது.

இது தொடர்பாக பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தனது டுவிட்டர் தளத்தில் கூறியிருப்பதாவது:-

நாட்டின் பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டங்களில் ஒன்றில் கூட ராகுல் காந்தி பங்கேற்கவில்லை. ஆனால் நாட்டுக்கு சோர்வு உண்டாக்கும் பணிகளிலும், நமது ஆயுதப்படைகளின் வீரத்தை கேள்வி கேட்கும் செயல்களிலும், ஒரு பொறுப்பான எதிர்க்கட்சி தலைவர் செய்யக்கூடாத அனைத்திலும் ஈடுபட்டு வருகிறார்.

ராகுல் காந்தி புகழ்பெற்ற பரம்பரையை சேர்ந்தவர். அவர்களுக்கு பாதுகாப்பை பொறுத்தவரை, கமிட்டிகள் எல்லாம் ஒன்றும் இல்லை, கமிஷன் மட்டுமே இலக்கு. நாடாளுமன்ற விவகாரங்களை புரிந்து கொள்ளும் ஏராளமான உறுப்பினர்கள் காங்கிரசில் உளளனர். ஆனால் ஒரு பரம்பரையில் மட்டும் அப்படிப்பட்ட தலைவர்கள் வளரவில்லை. உண்மையில் சொல்கிறேன்.

இவ்வாறு ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.

இதைப்போல பா.ஜனதா செய்தி தொடர்பாளர் நரசிம்மராவ் கூறுகையில், ‘பாதுகாப்பு தொடர்பாக இதுவரை நடத்தப்பட்டுள்ள 11 நிலைக்குழு கூட்டங்களில் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை. இந்த பரம்பரை குடும்பத்துக்கு கமிஷன் இருந்தால் மட்டுமே பாதுகாப்பு விவகாரங்களில் அக்கறை வரும். இந்த நிலைக்குழு கூட்டங்களில் ஏன் பங்கேற்கவில்லை? என்பதற்கு ராகுல் காந்தி விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

மேலும் அருணாசல பிரதேசத்தின் தவாங்கில் நாடாளுமன்ற நிலைக்குழு மேற்கொண்ட முக்கியமான கள சந்திப்பிலும் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை என குற்றம் சாட்டிய நரசிம்மராவ், இந்த நடவடிக்கைகளுக்காக அவர் ஆயுதப்படைகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Next Story