டிக்டாக் தடை; இந்தியாவில் தயாரான ‘பங்கா’வுக்கு கூடும் மவுசு
டிக்டாக் தடைக்கு பின் வந்துள்ள இந்தியாவிலேயே தயாரான ‘பங்கா’ செயலி கடந்த ஒரு வாரத்தில் 1 லட்சம் பயனாளர்களை ஈர்த்துள்ளது.
லூதியானா,
சமூக ஊடக ஆப்களில் ஒன்றான டிக்டாக் கடந்த 2017ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. சீனாவின் பைட்டான்ஸ் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான டிக்டாக் செயலி உலகம் முழுவதும் பயனாளர்களை கொண்டுள்ளது. டிக்டாக் செயலி இந்தியாவில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதற்கு அடுத்த இடத்தில் அமெரிக்கா உள்ளது.
கடந்த ஜூன் 15ந்தேதி லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பின் இரு நாடுகளிடையே பதற்றம் அதிகரித்தது. இந்நிலையில், தேச பாதுகாப்பு நலன்களை கவனத்தில் கொண்டு மத்திய அரசு டிக்டாக், ஹெலோ உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதித்தது.
டிக்டாக்கின் இந்திய பயனாளர்கள் பற்றிய விவரங்கள் சீன அரசிடம் அளிக்கப்பட்டு உள்ளது என்றும் கூறப்பட்டது. எனினும், டிக்டாக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான கெவின் மேயர், ‘டிக்டாக்கின் இந்திய பயனாளர்கள் பற்றிய விவரங்களை, சீன அரசு எங்களிடம் கேட்டதில்லை என்று என்னால் உறுதியாக கூற முடியும். இந்திய பயனாளர்களின் விவரங்கள் சிங்கப்பூரில் உள்ள செர்வர்களிலேயே சேமித்து வைக்கப்படுகின்றன’ என மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்து உள்ளார்.
இதனை தொடர்ந்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை கூட்டம் ஒன்றை வரும் நாட்களில் நடத்தவும் அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதனிடையே, டிக்டாக் செயலி தடையால் இந்தியாவிலுள்ள லட்சக்கணக்கான ரசிகர்கள் சோர்ந்து போயினர்.
அவர்களை மகிழ்விக்க ‘பங்கா’ என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவிலேயே தயாரான இந்த செயலி, கடந்த 1 வாரத்திற்குள்ளாகவே, 1 லட்சம் பயனாளர்களை பெற்றுள்ளது.
இதில், நம்முடைய முகங்களை கண்டறியும் மற்றும் சிறந்த வடிவமைப்புடனான ரியாலிட்டி தொழில் நுட்பம் ஆகியவை மற்ற செயலிகளில் இருந்து வேறுபட்டு பயனாளர்களை கவருகிறது.
இதேபோன்று, பணம் ஈட்டும் நோக்கிலான பதிவுகளை வெளியிட, பயனாளர்களை தூண்டும் வகையில் பிற செயலிகள் செயல்பட்டு வந்தன. ஆனால், ‘பங்கா’ செயலியில் நடத்தப்படும் போட்டிகளில் பங்கேற்று பயனாளர்கள் பரிசுகளை அள்ளும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
இதற்காக பல்வேறு ஹேஷ்டேக்குகள் மற்றும் பாடல்களின் பெயரில் தினமும் போட்டிகள் நடத்தப்படும். ரூ.1 லட்சம் வரை பண பரிசுகளும் வழங்கப்படும். பதிவுகளை வெளியிடுவோருக்கு நேரடியாக பணம் வழங்கும் சந்தர்ப்பமும் அமைத்து கொடுக்கப்படுகிறது. முதல் மாதத்தில் ரூ.1 கோடி அளவுக்கு பரிசுக்கான வெகுமதிகளை அளிப்பது என அந்நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
பயனாளர்களின் மதிப்புமிக்க விவரங்களை அந்நிய நாட்டுக்கு, அதுவும் மோதல் போக்கில் உள்ள நாட்டுடன் பகிருவது என்பது அர்த்தமற்றது என இதன் நிறுவனர்கள் நம்புகின்றனர். ஆனால், ‘பங்கா’ செயலி, உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டு உள்ளது. இதுதவிர, நாட்டின் உள்ளூர்களில் உள்ள செர்வர்களிலேயே அனைத்து விவரங்களும் சேமித்து வைக்கப்படுகின்றன என்பது இதில் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் ஆகும்.
Related Tags :
Next Story