உத்தர பிரதேசம்: பிரபல ரவுடி விகாஸ் துபேயின் கூட்டாளி போலீசாரால் சுட்டுக்கொலை


விகாஸ் துபேவின் கூட்டாளி அமர் துபே
x
விகாஸ் துபேவின் கூட்டாளி அமர் துபே
தினத்தந்தி 8 July 2020 7:42 AM IST (Updated: 8 July 2020 7:42 AM IST)
t-max-icont-min-icon

உத்தர பிரதேசத்தில் பிரபல ரவுடி விகாஸ் துபேயின் கூட்டாளி போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டான்.

லக்னோ,

உத்தரபிரதேசத்தின் கான்பூரை சேர்ந்தவன் விகாஸ் துபே. அங்கு மிகப்பெரிய ரவுடியாக வலம் வரும் இவன் மீது கொலை, கொள்ளை, கடத்தல், கொலை முயற்சி என 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. உள்ளூர்வாசி ஒருவரை கொலை செய்ய முயன்றதாக சமீபத்தில் சவுபேபூர் போலீஸ் நிலையத்தில் விகாஸ் துபே மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவரை கைது செய்வதற்காக போலீஸ்காரர்கள் ஜூலை 2 ஆம் தேதி  நள்ளிரவு அவனது வீட்டுக்கு சென்றனர்.

விகாஸ் துபே பயங்கர ரவுடி என்பதால் போலீஸ் துணை சூப்பிரண்டு, சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீஸ்காரர்கள் என பெரும் படையே துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் கான்பூருக்கு அருகே உள்ள பிக்ரு கிராமத்துக்குள் நுழைந்தது. ஆனால் போலீசார் தன்னை பிடிக்க வரும் தகவல் ஏற்கனவே விகாஸ் துபேவுக்கு கிடைத்திருக்கிறது.

எனவே தனது கூட்டாளிகளோடு பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தான். மேலும் அவர்கள், போலீசார் தங்கள் பதுங்கிடத்தை அடையாதவாறு சாலைகளில் தடுப்புகளை வைத்து தடைகளையும் ஏற்படுத்தி இருந்தனர்.

ஆனாலும் இந்த தடைகளை அகற்றிவிட்டு போலீசார் அவனது வீட்டை நோக்கி வேகமாக முன்னேறினர். வீட்டை நெருங்கியபோது ஒரு கட்டிடத்தின் மாடியில் இருந்து சரமாரியாக துப்பாக்கி தோட்டாக்கள் போலீசார் மீது பாய்ந்தன. அங்கு என்ன நடக்கிறது என போலீசார் சுதாரிப்பதற்குள் விகாஸ் துபேயின் கூட்டாளிகள் போலீசார் மீது துப்பாக்கி தோட்டாக்களை மழையாக பொழிந்தனர்.

இதில் குண்டுபாய்ந்து போலீஸ் துணைசூப்பிரண்டு, 3 சப்-இன்ஸ்பெக்டர்கள், 4 போலீஸ்காரர்கள் என 8 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து பலியாகினர். மேலும் 6 போலீஸ்காரர்கள் மற்றும் உள்ளூர்வாசி ஒருவர் என 7 பேர் பலத்த காயமடைந்தனர்.

எனினும் மீதமுள்ள போலீசார் துபே மற்றும் அவனது கூட்டாளிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். ஆனால் அதற்குள் அவர்கள் தங்களால் சுட்டு வீழ்த்தப்பட்ட போலீசாரிடம் இருந்த ஏ.கே.47 ரக துப்பாக்கி உள்ளிட்ட நவீன ஆயுதங்களை எடுத்துக்கொண்டு, அங்கிருந்து தப்பி விட்டனர்.

கான்பூரில் நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் உத்தரபிரதேசம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தப்பி ஓடிய விகாஸ் துபே மற்றும் அவனது கூட்டாளிகளை பிடிக்க போலீஸ் அதிரடிப்படையினர் முடுக்கி விடப்பட்டுள்ளனர். ஒரே நாள் இரவில், தேடப்படும் பயங்கர குற்றவாளியாக மாறி இருக்கும் விகாஸ் துபே மற்றும் அவனது கூட்டாளிகளை பிடிக்க மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.

ரவுடி விகாஷ் துபேவின் நெருங்கிய கூட்டாளியான அமர் துபேவை  போலீசார் இன்று அதிகாலை சுட்டுக்கொன்றனர். ஹமிர்பூர் மாவட்டத்தில் போலீசாருடன் நடைபெற்ற என்கவுண்டரின் போது அமர் துபே சுட்டுக்கொல்லப்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.

Next Story