ஜார்க்கண்டில் மந்திரி, எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா; முதல் மந்திரி சுய தனிமைப்படுத்தி கொண்டார்


ஜார்க்கண்டில் மந்திரி, எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா; முதல் மந்திரி சுய தனிமைப்படுத்தி கொண்டார்
x
தினத்தந்தி 8 July 2020 2:30 PM IST (Updated: 8 July 2020 2:53 PM IST)
t-max-icont-min-icon

ஜார்க்கண்டில் மந்திரி, எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், முதல் மந்திரி தன்னை சுய தனிமைப்படுத்தி கொண்டார்.

ராஞ்சி,

ஜார்க்கண்டில் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.  சோரனின் அமைச்சரவையில் மந்திரியாக இருந்து வருபவர் மித்லேஷ் தாகுர்.

இவருக்கு நடந்த பரிசோதனையில் நேற்று வெளியான முடிவில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.  இதேபோன்று அந்த கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. மதுரா மஹதோவுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.  அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை, தனிமைப்படுத்தி கொள்ளும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

இதன்படி, மந்திரி மித்லேஷ் மற்றும் எம்.எல்.ஏ.வுடன் தொடர்பில் இருந்த ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.  இதேபோன்று முதல் மந்திரி அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரையும், வீட்டில் சுய தனிமைப்படுத்துதலில் இருக்கும்படி கேட்டு கொண்டார்.

இதனால் முதல் மந்திரி இல்லத்திற்கு செல்வதற்கு மற்றவர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.  எனினும், ஒவ்வொரு முக்கிய பணிகளிலும் நான் தொடர்ந்து ஈடுபடுவேன் என்றும் ஹேமந்த் சோரன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Next Story