இந்தியாவில் 2021ம் ஆண்டில் ஒரே நாளில் 2.87 லட்சம் கொரோனா பாதிப்புகள் ஏற்படும்! அதிர்ச்சி தகவல்


இந்தியாவில் 2021ம் ஆண்டில் ஒரே நாளில் 2.87 லட்சம் கொரோனா பாதிப்புகள் ஏற்படும்! அதிர்ச்சி தகவல்
x
தினத்தந்தி 8 July 2020 5:14 PM IST (Updated: 8 July 2020 5:14 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் தடுப்பு மருந்து இல்லாத நிலையில் 2021ம் ஆண்டு இறுதியில் ஒரே நாளில் 2.87 லட்சம் கொரோனா பாதிப்புகள் ஏற்படும் என ஆய்வொன்று தெரிவிக்கின்றது.

புதுடெல்லி,

உலக அளவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1.19 கோடியாக உயர்ந்து உள்ளது.  இதேபோன்று 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

இதேபோன்று, இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமுடன் அதிகரித்து வருகிறது.  6 லட்சமாக இருந்த கொரோனா பாதிப்பு 5 நாட்களில் 7 லட்சமாக உயர்ந்துள்ளது. இதில் முதல் 1 லட்சம் பேரை பாதிப்புக்கு உள்ளாக்க கொரோனா 110 நாட்கள் எடுத்து கொண்டது. ஆனால் அடுத்த 49 நாட்களில் 6 லட்சம் பேரை தாக்கி இருக்கிறது.

கடந்த 24 மணிநேரத்தில் 22 ஆயிரத்து 752 பேர் நோய்த்தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.  482 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7.42 லட்சம் ஆகவும், பலி எண்ணிக்கை 20,642 ஆகவும் உயர்ந்து இருக்கிறது.

இந்த நிலையில், இந்தியாவில் தடுப்பு மருந்து இல்லாத நிலையில், 2021ம் ஆண்டின் குளிர்கால இறுதியில் ஒரே நாளில் 2.87 லட்சம் கொரோனா பாதிப்புகள் ஏற்படும் என ஆய்வொன்று தெரிவிக்கின்றது.

இதுபற்றி மசாசூசெட்ஸ் தொழில் நுட்ப மையம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.  இதில் நம்பத்தகுந்த பரிசோதனை முடிவுகளை வைத்திருக்கும், 475 கோடி மக்களை கொண்ட 84 நாடுகளின் தரவுகள் ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டன.

இதன்படி, கொரோனா வைரசுடன் மக்கள் எப்படி தொடர்புப்படுத்தி கொள்கிறார்கள், கொரோனா வைரசால் எப்படி பாதிக்கப்படுகிறார்கள், எப்படி பரிசோதனை செய்யப்படுகிறார்கள், எத்தனை பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள், எத்தனை பேர் உயிரிழக்கிறார்கள் மற்றும் இதுபோன்று அபாய காலகட்டத்தில் அவற்றை எதிர்கொள்ள மக்கள் எப்படி தங்களது அணுகுமுறையை மாற்றி கொள்கிறார்கள் என்ற அடிப்படையில் கொரோனா வைரசின் வளர்ச்சி மற்றும் பரவல் ஆகியவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

இதில், அந்த மைய பேராசிரியர்களான ஹசீர் ரஹ்மான்டேட் மற்றும் ஜான் ஸ்டெர்மென் ஆகியோரும் மற்றும் பிஎச்.டி. படித்து வரும் சே யாங் லிம் என்பவரும் ஈடுபட்டனர்.  இதில் நாள்தோறும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் விகிதங்களின் அடிப்படையில் 10 நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டன.

அவற்றில், இந்தியாவில் 2021ம் ஆண்டு குளிர்கால இறுதியில் ஒரே நாளில் 2.87 லட்சம் கொரோனா பாதிப்புகள் ஏற்பட கூடும்.  2021ம் ஆண்டில் தடுப்பு மருந்து அல்லது சிகிச்சை வசதிகள் இல்லாத சூழலில் அதிக பாதிப்புகளுடன் கூடிய இந்த நிலை காணப்படும் என்றும் ஆய்வாளர்கள் தங்களது ஆய்வில் தெரிவித்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து அமெரிக்கா, தென்ஆப்பிரிக்கா, ஈரான், இந்தோனேசியா, இங்கிலாந்து, நைஜீரியா, துருக்கி, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் அதிக பாதிப்புகள் ஏற்படும் என்றும் ஆய்வு முடிவு தெரிவித்து உள்ளது.

Next Story