காஷ்மீரில் பாஜக பிரமுகர் உட்பட 3 பேர் சுட்டுக்கொலை


காஷ்மீரில் பாஜக பிரமுகர் உட்பட 3 பேர் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 8 July 2020 10:56 PM IST (Updated: 8 July 2020 10:56 PM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் பாஜக பிரமுகர் அவரது தந்தை, சகோதரர் ஆகியோர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஸ்ரீநகர்,

காஷ்மீரின் வடக்கு மாவட்டமான பந்திப்போராவைச் சேர்ந்த ஷேக் வாசிம் பாரி, இவர் பாஜக மாவட்ட தலைவராக உள்ளார். இவரது சகோதரர் உமர் சுல்தான் , தந்தை பஷீர் அகமது ஷேக். இவர்கள் அப்பகுதியில் கடை வைத்துள்ளனர். சம்பவத்தன்று அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென கடைக்குள் புகுந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் மூவரும் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். கொலையாளிகள் பயங்கரவாதிகள் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து  ஜம்மு காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் கூறுகையில்,

பந்திப்போரா பாஜக முன்னாள் தலைவர் வாசிம் பாரி அவரது தந்தை மற்றும் சகோதரர் 3 பேரும் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தனர். 

வாசிம் பாரிக்கு ஏற்கனவே அச்சுறுத்தல் இருந்ததால், உள்ளூர் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 8 போலீசார் பாதுகாப்புக்கு இல்லாத நேரம் பார்த்து துரதிர்ஷ்டவசமாக இந்த சம்பவம் நடந்துள்ளது. விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் பாஜக தலைவருக்கு நியமிக்கப்பட்ட எட்டு தனிப்பட்ட பாதுகாப்பு போலீசார் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story