நவம்பர் மாதம்வரை இலவச அரிசி, பருப்பு வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல்
நவம்பர் மாதம்வரை இலவச அரிசி, பருப்பு வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.
புதுடெல்லி,
பிரதமர் மோடி கடந்த மாதம் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது, நாடு முழுவதும் ஏழைகளுக்கு நவம்பர் மாதம்வரை இலவச அரிசி, பருப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அதில், நவம்பர் மாதம்வரை, குடும்பத்துக்கு ஒரு கிலோ பருப்பு, நபர் ஒருவருக்கு 5 கிலோ அரிசி வீதம் இலவசமாக வழங்கப்படுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன்மூலம் 81 கோடி ஏழைகள் பலன் அடைவார்கள். இதற்கு ரூ.1 லட்சத்து 49 ஆயிரம் கோடி செலவாகும். இதுபோல், ரேஷன் கார்டு இல்லாதவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களுக்கு ஆகஸ்டு மாதம்வரை இலவச அரிசி, பருப்பு வழங்கப்படும்.
“உலகில் எந்த நாட்டிலும் இப்படி ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டது இல்லை. பிரிவினைக்கு பின்னர் இத்தகைய திடட்ம் அறிவிக்கப்படுவது இதுவே முதல்முறை“ என்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நிருபர்களிடம் தெரிவித்தார்.
மேலும், பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ், ஏழை பெண்களுக்கு இலவச கியாஸ் சிலிண்டர்கள் வழங்கும் சலுகை, கடந்த மாதத்துடன் முடிவடைந்தது. இச்சலுகையை செப்டம்பர் மாதம்வரை நீட்டிக்க மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனால் 7 கோடியே 40 லட்சம் ஏழை பெண்களுக்கு மேலும் தலா 3 இலவச சிலிண்டர்கள் கிடைக்கும்.
வருங்கால வைப்புநிதி திட்டத்தின் கீழ், பணியாளர்கள் மற்றும் நிறுவனங்களின் 12 சதவீத பங்களிப்புத்தொகையை மத்திய அரசே செலுத்தும் சலுகையை ஆகஸ்டு மாத சம்பளம்வரை நீட்டிக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இதனால், 72 லட்சம் பணியாளர்களும், 3 லட்சத்து 67 ஆயிரம் நிறுவனங்களும் பலனடையும். மத்திய அரசுக்கு ரூ.4 ஆயிரத்து 860 கோடி செலவாகும்.
நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி, ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி, யுனைடெட் இன்சூரன்ஸ் கம்பெனி ஆகிய 3 பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களுக்கு ரூ.12 ஆயிரத்து 450 கோடி மூலதனம் வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், நகர்ப்புற புலம்பெயர்ந்தவர்களுக்கும், ஏழைகளுக்கும் மலிவான வாடகை குடியிருப்புகள் உருவாக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
இதன்படி, ஏற்கனவே காலியாக உள்ள அரசாங்க குடியிருப்புகள், மலிவு வாடகை குடியிருப்புகளாக மாற்றப்படும். முதல்கட்டமாக, 3 லட்சம் பேர் பலனடைவார்கள்.
Related Tags :
Next Story