ரவுடி விகாஸ் துபேவின் கூட்டாளிகள் இருவர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை


ரவுடி விகாஸ் துபேவின் கூட்டாளிகள் இருவர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 9 July 2020 8:46 AM IST (Updated: 9 July 2020 10:30 AM IST)
t-max-icont-min-icon

உத்தர பிரதேச ரவுடி விகாஸ் துபேவின் கூட்டாளிகள் இருவர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் பிக்ரு கிராமத்தை சேர்ந்தவன் பிரபல ரவுடி விகாஸ் துபே. கடந்த 3-ந் தேதி நள்ளிரவு அவனை போலீசார் கைது செய்ய சென்றனர். அப்போது, அவனும், அவனுடைய கூட்டாளிகளும் நடத்திய தாக்குதலில் 8 போலீசார் பலியானார்கள்.

போலீஸ் துப்பாக்கி சூட்டில் விகாஸ் துபே கூட்டாளிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சம்பவத்தை தொடர்ந்து, விகாஸ் துபேவுக்கு நெருக்கமான 5 பேர் கைது செய்யப்பட்டனர். 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உள்ளூர் போலீசார் 68 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர். விகாஸ் துபே மற்றும் அவனது கூட்டாளிகளை கைது செய்ய போலீசார் திவீரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், விகாஸ் துபேயின் கூட்டாளிகள் இருவர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  கடந்த செவ்வாய்க்கிழமை அரியானாவின் பரிதாபாத்தில் கைது செய்யப்பட்ட பிரபாத் என்ற விகாஸ் துபேவின் கூட்டாளி, இன்று காலை போலீஸ் பிடியில் இருந்த தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட மோதலில், பிரபாத் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டான்.

அதேபோல், விகாஸ் துபேவின் மற்றொரு முக்கிய கூட்டாளியான ரன்பீர் என்ற பவான் சுக்லா என்பவன், இன்று அதிகாலை 3 மணியளவில் போலீசாருடன் நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் கொல்லப்பட்டான். முன்னதாக நேற்று , விகாஸ் துபேயின் நெருங்கிய கூட்டாளி அமர் துபே  என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

8 போலீசாரை சுட்டுக்கொன்ற சம்பவத்திற்கு காரணமான ரவுடி விகாஸ் துபே இன்னும் போலீஸ் பிடியில் சிக்காமல் உள்ளான்.  விகாஸ் துபேவை கைது செய்யும்வகையில் துப்பு கொடுப்பவருக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதை ரூ.5 லட்சமாக உத்தரபிரதேச அரசு உயர்த்தி உள்ளது.

Next Story