10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் பற்றிய தேதி அறிவிப்பு போலியானவை; சி.பி.எஸ்.இ. வாரியம் விளக்கம்


10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் பற்றிய தேதி அறிவிப்பு போலியானவை; சி.பி.எஸ்.இ. வாரியம் விளக்கம்
x
தினத்தந்தி 9 July 2020 5:42 PM IST (Updated: 9 July 2020 5:42 PM IST)
t-max-icont-min-icon

10, 12ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் பற்றிய தேதி அறிவிப்பு போலியானவை என்று சி.பி.எஸ்.இ. இன்று விளக்கம் அளித்து உள்ளது.

புதுடெல்லி,

சி.பி.எஸ்.இ. சார்பில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி பற்றிய அறிவிப்பு ஒன்று இன்று ஊடகங்களுக்கு வெளியானது.  அதில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல்வேறு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர்க்கை நடைமுறைக்காகவும் மற்றும் தொடர் கோரிக்கைக்காகவும், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துடன் இணைந்து 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை முன்கூட்டியே வெளியிட முடிவு செய்துள்ளோம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதேபோன்று, 12ம் வகுப்புக்கு வரும் 11ந்தேதி மாலை 4 மணியளவிலும், 10ம் வகுப்புக்கு வரும் 13ந்தேதி மாலை 4 மணியளவிலும் தேர்வு முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.  இதற்கு சி.பி.எஸ்.இ. செயலாளர் அனுராக் திரிபாதி ஒப்புதல் வழங்கியது போன்று அறிக்கை வெளியானது.

இந்த நிலையில், 10, 12ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் பற்றிய தேதி அறிவிப்பு போலியானவை என்று சி.பி.எஸ்.இ. இன்று விளக்கம் அளித்து உள்ளது.  போலியான செய்தி பரப்பப்பட்டு உள்ளது.  தேர்வு முடிவுகள் பற்றிய தேதி அறிவிப்புகளை வாரியம் இன்னும் வெளியிடவில்லை என்று அதில் தெரிவித்து உள்ளது.

Next Story