கொரோனா பாதிப்பு குணமடைந்தோர் விகிதம் 62.09% ஆக உயர்வு; சுகாதார அமைச்சகம் அறிவிப்பு
நாட்டில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 62.09% ஆக உயர்வடைந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனாவுக்கு 7.67 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பலி எண்ணிக்கை 21,129 ஆக உயர்வடைந்து உள்ளது. இந்தியாவில் டெல்லி, குஜராத் மற்றும் உத்தர பிரதேசம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் குணமடைந்தோர் விகிதம் ஆனது, தேசிய சராசரி குணமடைந்தோர் விகிதத்திற்கும் கூடுதலாக உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் கடந்த 3 நாட்களுக்கு முன் தெரிவித்து இருந்தது.
இவற்றில் சண்டிகர் (85.9), லடாக் (82.2), உத்தரகாண்ட் (80.9), சத்தீஷ்கார் (80.6), ராஜஸ்தான் (80.1) ஆகிய மாநிலங்களில் இந்த விகிதம் 80 சதவீதத்திற்கும் மேல் உள்ளது என்றும் தெரிவித்தது.
நாடு முழுவதுமுள்ள 1,115 பரிசோதனை மையங்களில் தொடர்ச்சியாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்ததில், கொரோனா பாதிப்பு பரிசோதனை எண்ணிக்கை 1 கோடியை கடந்துள்ளது என்றும் தெரிவித்து உள்ளது. நாட்டில் நாளொன்றுக்கு சராசரியாக 2.6 லட்சம் மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்படுகின்றன.
இந்தியாவில், கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டு குணமடைந்தவர்களின் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது நேற்று முன்தினம் 61.13% ஆக உயர்வடைந்து இருந்தது. இந்த விகிதம் 61.53% ஆக நேற்று உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்தது.
இந்நிலையில், இந்தியாவில் 2,06,588 பேர் சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையை விட குணமடைந்தோர் எண்ணிக்கை 1.75 முறை அதிகம் ஆக உள்ளது. 4.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை குணமடைந்து உள்ளனர். இதனால், நாட்டில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 62.09% ஆக உயர்வடைந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story