பெங்களூருவில் 10,100 படுக்கைகளுடன் தற்காலிக ஆஸ்பத்திரி ஒரு வாரத்தில் செயல்படும் - முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு


பெங்களூருவில் 10,100 படுக்கைகளுடன் தற்காலிக ஆஸ்பத்திரி ஒரு வாரத்தில் செயல்படும் - முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு
x
தினத்தந்தி 10 July 2020 9:31 AM IST (Updated: 10 July 2020 9:31 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் 10 ஆயிரத்து 100 படுக்கைகளுடன் தற்காலிக ஆஸ்பத்திரி ஒரு வாரத்தில் செயல்பட தொடங்கும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அதுவும் தலைநகர் பெங்களூருவில் பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளது. இது கர்நாடக அரசுக்கு மிகுந்த அதிர்ச்சியை தந்துள்ளது. இந்த நிலையில அறிகுறியற்ற கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க துமகூரு ரோட்டில் உள்ள பெங்களுரு சர்வதேச கண்காட்சி அரங்கத்தில் நாட்டிலேயே வேறு எங்கும் இல்லாத அளவுக்கு 10 ஆயிரத்து 100 படுக்கைகள் கொண்ட தற்காலிக ஆஸ்பத்திரி (கொரோனா கண்காணிப்பு மையம்) அமைக்கப்பட்டுள்ளது.

அந்த ஆஸ்பத்திரியை முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று நேரில் வந்து பார்வையிட்டார். அங்கு ஆய்வு செய்த பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பெங்களூருவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதை தடுக்க மாநில அரசு நேர்மையான முறையில் தீவிரமாக பணியாற்றி வருகிறது. நான் பெங்களூரு சர்வதேச கண்காட்சி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக ஆஸ்பத்திரியை நேரில் பார்வையிட்டேன். அங்கு 10 ஆயிரத்து 100 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அங்கு அனைத்து வகையான அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அங்கு, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ராஜேந்திரகுமார் கட்டாரியா, அனில்குமார், எனது அரசியல் செயலாளர் எஸ்.ஆர்.விஸ்வநாத் ஆகியோர் மிகுந்த சிரமப்பட்டு இந்த ஏற்பாடுகளை செய்துள்ளனர். இங்கு 100 நோயாளிகளுக்கு ஒரு டாக்டர், 2 நர்சுகள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள், தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். மொத்தம் அங்கு 2,200 மருத்துவ ஊழியர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.

அங்கு அவர்களுக்கு தேவையான உணவு வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. அங்கு தொலைக்காட்சி பெட்டி மற்றும் கேரம்போர்டு, சதுரங்க விளையாட்டு வசதியும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. பாதுகாப்பு கவச உடைகள், தீவிர சிகிச்சை பிரிவு, பிராண வாயு வழங்கும் வசதியும் செய்யப்பட்டு வருகிறது.

இதற்கான கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு சேரும் கழிவுகளை சேகரிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. அந்த மையத்தில் அறிகுறி இல்லாத, லேசான அறிகுறி உள்ள கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்படுவார்கள். ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதை எதிர்கொள்ள அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

கொரோனா உதவி மையம் அமைத்துள்ளோம். பொதுமக்கள் நம்பிக்கையை இழக்கக்கூடாது. பொறுமையுடன் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கொரோனா பாதிப்பு ஏற்பட்டவுடன் ஆம்புலன்ஸ் வர தாமதமானால் அதுபற்றி புகார் தெரிவிக்கலாம். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து எம்.எல்.ஏ.க்களும், கொரோனா ஆஸ்பத்திரிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்யலாம். குறைகள் இருந்தால் அதுபற்றி எனக்கு தகவல் தெரிவிக்கலாம்.

பெங்களூருவில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டாம். அங்கு கொரோனாவை பரப்ப வேண்டாம். இன்னும் பல மாதங்கள் இந்த கொரோனா பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அனைவரும் ஒற்றுமையாக இணைந்து பணியாற்றி கொரோனாவை தடுக்க முயற்சி செய்யலாம்.

கொரோனாவை கட்டுப்படுத்த தனியார் மருத்துவமனைகள், ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம். அதிக கட்டணத்தை வசூலிக்கக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளேன்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Next Story