விதிகளை பின்பற்றாத மக்களால் ஊரடங்கு முடிவு; மராட்டிய துணை முதல் மந்திரி காரசார பேட்டி


விதிகளை பின்பற்றாத மக்களால் ஊரடங்கு முடிவு; மராட்டிய துணை முதல் மந்திரி காரசார பேட்டி
x
தினத்தந்தி 10 July 2020 8:06 PM IST (Updated: 10 July 2020 8:06 PM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் விதிகளை பின்பற்றாத மக்களால் ஊரடங்கு முடிவு எடுத்துள்ளோம் என்று துணை முதல் மந்திரி அஜித் பவார் பேட்டியில் கூறியுள்ளார்.

புனே,

நாட்டின் கொரோனா பாதிப்புகளில் முதல் இடத்தில் மராட்டியம் உள்ளது.  மும்பை, புனே மற்றும் நாக்பூர் நகரங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.  இந்நிலையில், மராட்டியத்தின் புனே நகரில் 22 கிராமங்கள் கண்டறியப்பட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.  புனே மற்றும் பிம்ப்ரி சின்ச்வாட் பகுதிகள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் மற்றும் இந்த கிராமங்களிலும் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என புனே மாவட்ட ஆட்சியர் கிஷோர் ராம் இன்று கூறியுள்ளார்.

இதுபற்றி புனே நகராட்சி ஆணையாளர் சேகர் கெய்க்வாட் கூறும்பொழுது, வரும் 13ந்தேதி முதல் 23ந்தேதி வரை புனே நகரில் ஊரடங்கு இரண்டு கட்டங்களாக அமலில் இருக்கும்.  13ந்தேதி முதல் 18ந்தேதி வரையிலான முதல் கட்டத்தில், மருந்து கடைகள், பால் பண்ணைகள் மற்றும் மருத்துவமனைகள் திறந்திருக்கும்.  பத்திரிகைகளுக்கும் அனுமதி வழங்கப்படும்.

அடுத்து 18ந்தேதி முதல் 23ந்தேதி வரையிலான 2வது கட்டத்தில், மருந்து கடைகள், பால் பண்ணைகள், மருத்துவமனைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் அனுமதிக்கப்படும் என கூறியுள்ளார்.

ஊரடங்கு பற்றி மராட்டிய துணை முதல் மந்திரி அஜித் பவார் அளித்த பேட்டியில், அடுத்த 2 நாட்களில் அத்தியாவசிய பொருட்களை மக்கள் வாங்கி கொள்ள வேண்டும்.  மக்களிடம் பாதிப்பு இல்லை என உறுதி செய்து கொள்ள வேண்டும்.  அதன் பின்னரே இந்த சங்கிலி உடைக்கப்பட வேண்டும்.

இங்கிலாந்து நாட்டை எடுத்துக்காட்டாக எடுத்து கொள்ளுங்கள்.  அவர்கள் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தி உள்ளனர்.  சில நேரங்களில் மக்கள் விதிகளை பின்பற்றாதபொழுது, இதுபோன்ற (ஊரடங்கு) சில முடிவுகளை எடுக்க வேண்டி உள்ளது.  தானே நகரிலும் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளோம்.

எந்த இடங்களில் எல்லாம் பாதிப்புகள் அதிகரிக்கின்றனவோ, அங்கெல்லாம் இதுபோன்ற முடிவு எடுக்கப்படும் என கூறினார்.

Next Story