கொரோனா சிகிச்சைக்கு ' இட்டோலிசுமாப் ' மருந்தை பயன்படுத்த அனுமதி


கொரோனா சிகிச்சைக்கு  இட்டோலிசுமாப்  மருந்தை பயன்படுத்த அனுமதி
x
தினத்தந்தி 11 July 2020 9:06 PM IST (Updated: 11 July 2020 9:06 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா சிகிச்சைக்கு ' இட்டோலிசுமாப் ' மருந்தை பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு மையம் அனுமதி வழங்கி உள்ளது.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் தொற்று நோய் இதுவரை மருந்தில்லா நோயாகத்தான் நீடிக்கிறது. இதற்கான சிகிச்சையில் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலகளாவிய மருத்துவ விஞ்ஞானிகள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதே நேரத்தில் இப்போது பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து அவர்களது உயிர்களை காப்பாற்ற வேண்டிய அத்தியாவசிய தேவை எழுந்துள்ளது. இதை உலக நாடுகள் அனைத்தும் புரிந்து கொண்டு, ஏற்கனவே பிற நோய்களுக்கு தந்து உபயோகத்தில் இருக்கிற மருந்துகளையும் தந்து சோதித்து வருகின்றன.

அப்படித்தான் இந்தியாவில் மலேரியா காய்ச்சலுக்கு தரப்படுகிற ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை கொரோனா வைரஸ் தொற்றின் ஆரம்ப கட்டத்தில் நோயாளிகளுக்கு தரலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது.

இதேபோன்று வைரஸ் எதிர்ப்பு மருந்தான ரெம்டெசிவிர் மருந்தையும் கொரோனா நோயாளிகளுக்கு தரலாம் என கடந்த 13-ந் தேதி மத்திய அரசு அனுமதி அளித்தது. இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை அல்லது அதன் செயல்பாடுகளை மாற்றி அமைக்கக்கூடியதாகும்.

மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பு மிதமாக இருக்கிற சூழலில் நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சையும் அளிக்க மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்தது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சையில் புதிய மருந்தை மத்திய சுகாதார துறை சேர்த்துள்ளது. இந்த மருந்தின் பெயர், டெக்ஸாமெத்தாசோன் என்பதாகும். இந்த மருந்து மலிவானது. இந்தியாவில் நுரையீரல் தொற்று நோய்களுக்கு பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சொரியாஸிஸ் நோய் சிகிச்சைக்கு பயன்படும் இட்டோலிசுமாப் மருந்தை தீவிர மற்றும் மிதமான பாதிப்பு உள்ள நோயாளிகளுக்கு அவசர சூழல்களில் 5 எம்.எல் கட்டுப்பாடுடன் பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டுத்துறை அனுமதி வழங்கி உள்ளது.

நோய் எதிர்ப்பு செல்களால் சுரக்கப்படும் சைட்டோகைன் எனப்படும் மூலக்கூறுகள் அதிக அளவில் வெளிப்படும் போது, அதுவே நோயாளியின் உயிருக்கு ஆபத்தாகிறது. இது போன்ற சூழலை சமாளிக்க கட்டுப்பாடுடன் இட்டோலிசுமாப் மருந்தினை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் அடிப்படையில் இம்மருந்தினை பயன்படுத்த இதய மருத்துவ நிபுணர்கள், மற்றும் மருந்தியல் துறை நிபுணர்கள் அடங்கிய குழு ஒப்புதல் தெரிவித்துள்ளது.

எனவே இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உயிர்களை காப்பதில் இந்த மருந்து முக்கிய பங்களிப்பு செய்யும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story