கேரளாவில் இன்று மேலும் 435 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கேரளாவில் இன்று மேலும் 435 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக, அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி ஷைலஜா தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்,
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் மராட்டிய மாநிலம் முதல் இடமும், தமிழகம், டெல்லி மற்றும் குஜராத் ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. கேரளாவிலும் தற்போது கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் கேரளாவில் இன்று மேலும் 435 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக, அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி ஷைலஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரளாவில் இன்று 435 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 873 ஆக உயர்ந்து உள்ளது. வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 128 பேர் வெளி நாடுகளில் இருந்து வந்தவர்கள், 87 பேர் வெளி மாநிலங்களில் இருந்து கேரளா வந்தவர்கள். 206 பேர் தொடர்பு மூலம் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர்.
மாநிலத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை தற்போது 4 ஆயிரத்து 097 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 3,743 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் மொத்தம் 1,81,784 பேர் கண்காணிப்பில் உள்ளனர். 1,77,794 பேர் தங்கள் வீடுகளில் அல்லது நிறுவன தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் கண்காணிக்கப்படுகிறார்கள், 3,990 பேர் மருத்துவமனைகளில் தனிமையில் உள்ளனர். 633 பேர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று, 30 புதிய இடங்கள் ஹாட்ஸ்பாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story