பரிசோதனை முடிவுக்காக காத்திருக்காமல், அறிகுறிகள் இருந்தாலே கொரோனா சிகிச்சை அவசியம்: மருத்துவ நிபுணர்கள் திட்டவட்டம்
பரிசோதனை முடிவுக்காக காத்திருக்காமல், அறிகுறிகள் இருந்தாலே கொரோனா சிகிச்சை அவசியம் என்று மருத்துவ நிபுணர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
டாக்டர் அபிஷேக் பயானா, 26 வயதில் அகாலமாய் மரணம் அடைந்தபோது, டெல்லி மருத்துவ உலகம் அதிர்ச்சியில் உறைந்துதான் போனது.
டெல்லி மவுலானா ஆசாத் பல் மருத்துவ கல்லூரியின் இளநிலை மருத்துவ நிபுணரான இவர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகளான தொண்டை வலி, சுவாச பிரச்சினையால் பாதிக்கப்பட்டார். இவருக்கு 2 முறை கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. 2 முறை நடந்த கொரோனா பரிசோதனையிலும், தொற்று இல்லை என்றுதான் முடிவு வந்திருக்கிறது.
ஆனால் அவர் மரணம் அடைந்து விட்டார். அவர் மரணம் அடைந்ததையொட்டி எழுதப்பட்ட மரண குறிப்பு, அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுடன் ஒத்த வெளிப்பாடுகளை தெளிவாக குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்பின்னணியில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு எய்ம்ஸ் ஆஸ்பத்திரியின் உறைவிட மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் ஒரு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், தொற்றுநோய்களின்போது எதிர்பாராத, விவரிக்கப்படாத மரணங்களுக்கு தொழில்முறை விசாரணையை நடத்துவதற்கு ஒரு நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, இப்போது பல்வேறு மருத்துவ நிபுணர்களும், கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்று வந்தாலும், சம்மந்தப்பட்ட நபருக்கு தொற்று அறிகுறிகள் இருந்தால், அவர்களுக்கு கொரோனா சிகிச்சையை தொடங்கி விட வேண்டும், அவர்களுக்கு கொரோனா தொற்றை உறுதிசெய்யும் முடிவுக்காக காத்திருக்கக்கூடாது என்று ஒருமித்த குரலை எழுப்பி உள்ளனர்.
பல முறை கொரோனா அறிகுறிகள் இருந்தும் பரிசோதனையில் தொற்று இல்லை என வந்து, கடைசியில் தொற்று உறுதியானவர்கள் பலர் இருக்கிறார்கள் என்று அவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
டெல்லி சப்தர்ஜிங் ஆஸ்பத்திரியின் நுரையீரல் துறை பேராசிரியர் டாக்டர் நீரஜ் குப்தா, “நிபுணர்களின் பொதுவான கருத்து, 70 சதவீத உணர்திறனை மட்டுமே கொண்ட ஆர்.டி.பி.சி.ஆர். சோதனையை நம்புவதைவிட, மருத்துவ அறிகுறியியல் மற்றும் சி.டி.ஸ்கேன் அறிக்கைகள் ஆகியவற்றில் எழும் அதிகளவு சந்தேகம், சிகிச்சைக்கு வழிகாட்டுவதாக அமைய வேண்டும் என்பதுதான்” என்கிறார்.
ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை முடிவை மட்டுமே சார்ந்திருந்திருந்தால், பல கொரோனா நோயாளிகள் தவற விடப்படும் ஆபத்து இருப்பதாகவும் இவர் சுட்டிக்காட்டுகிறார். பரிசோதனை முடிவுக்காக காத்திருக்காமல், அறிகுறிகள் இருக்கிறபோது சிகிச்சையை தொடங்கி விட வேண்டும் என்பது இவரது கருத்து.
டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியின் முதியோர் மருத்துவ துறை பேராசிரியர் டாக்டர் விஜய் குர்ஜார் கூறும்போது, “ 3 முறை, 4 முறை ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை நடத்தியும் தொற்று இல்லை என வந்தவர்கள் உண்டு. ஆனால் அறிகுறிகள் இருக்கும். சி.டி.ஸ்கேன் அறிக்கை கொரோனா பாதிப்புக்கான வித்தியாசமான நிமோனியாவை அடையாளம் காட்டும். பின்னர் அவர்கள் உடலில் கொரோனாவுக்கான நோய் எதிர்ப்புச்சக்தி உருவாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும். இது அவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று இல்லை என வந்தாலும், தொற்று இருப்பதையே உறுதி செய்வதாக அமைகிறது. எனவே நோயாளிகளுக்கு அறிகுறிகள் இருக்கிறபோது, வயதானவர்களாக, நாள்பட்ட பிற நோய்கள் உடையவர்களாக இருக்கிறபோது கொரோனாவுக்கான சிகிச்சையை தொடங்கி விட வேண்டும். இவர்களுக்கு கொரோனா தொற்று, ஆர்.டி.பி.சி.ஆர். சோதனையில் உறுதியாவதற்காக காத்திருக்கக்கூடாது” என்கிறார்.
டெல்லி இந்திரபிரஸ்தா அப்பல்லோ ஆஸ்பத்திரி சுவாச கோளாறு, தூக்க கோளாறு மருத்துவ நிபுணர் டாக்டர் நிகில் மோடி கூறும்போது, “ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையில் தவறான முடிவு வரக்காரணம், சம்பந்தப்பட்ட நபரிடம் இருந்து மாதிரிகள் முறையாக சேகரிக்கப்படாததுதான்.
அதே போன்று வைரசின் தாக்கம் லேசாக இருக்கிறபோது, தொற்று இருந்தாலும்கூட, இல்லை என முடிவு வர வாய்ப்பு உள்ளது. இப்படிப்பட்ட நிலைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் அதிகமாக இருக்கிறபோது, இதில் ஒரு முடிவுக்கு வருவதில் நுரையீரல் சி.டி.ஸ்கேன், உதவியாக இருக்கும்” என்கிறார்.
உண்மைதான். எல்லா பரிசோதனைகளும் 100 சதவீதம் நம்பகமானவை என்று யாரும் ஆணித்தரமாக சொல்லிவிட முடியாது என்கிறபோது, அறிகுறிகள் இருந்தாலே கொரோனா சிகிச்சையை தொடங்கிவிடுவது நோயாளிகளின் உயிரைக்காக்க துணை நிற்கும்.
Related Tags :
Next Story