தங்கம் கடத்தல் வழக்கு: கைதான ஸ்வப்னா சுரேசுக்கு கொரோனா பாதிப்பு இல்லை
தங்கம் கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேசுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என பரிசோதனையில் தெரியவந்து உள்ளது
திருவனந்தபுரம்:
திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கத்தை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கடந்த 5-ந்தேதி கைப்பற்றினர். இந்த கடத்தல் தொடர்பாக தூதரக முன்னாள் ஊழியர் சரித் ஏற்கனவே கைது செய்யப்பட்டார்.
இந்த கடத்தலில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஸ்வப்னா சுரேஷ் என்ற, மாநில தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) துறை முன்னாள் ஊழியர் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோர் தலைமறைவாயினர். இவர்கள் 3 பேர் மட்டுமின்றி எர்ணாகுளத்தை சேர்ந்த பாசில் பரீத் ஆகிய 4 பேர் மீதும் உபா சட்டத்தின் கீழ் தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டோரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. அதன் பலனாக ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் இருவரும் நேற்று முன்தினம் பெங்களூருவில் சிக்கினர். அவர்களை கைது செய்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் கேரளா கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தனர்.
அதன்படி காரிலேயே அவர்களை நேற்று காலையில் கேரளாவின் கொச்சிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் ஆலுவாவில் உள்ள ஆஸ்பத்திரியில் இருவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பு சிறப்பு கோர்ட்டில் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களை 30-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து இருவரும் கொரோனா பரிசோதனைக்காக அதற்கான மையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அங்கு ஸ்வப்னா சுரேஷ் மற்றும் அவருடைய கூட்டாளி சந்தீப் நாயருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது.
இருவருக்கும் பாதிப்பு இல்லை என்று பரிசோதனை முடிவுகளில் தெரிய வந்துள்ளது. இன்று அவர்கள் தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுகின்றனர். அவர்களை பத்து நாள் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரியுள்ள என்.ஐ.ஏ. அதிகாரிகளின் மனுவை நீதிமன்றம் பரிசீலிக்க உள்ளது. இதன் பின்னர் ஸ்வப்னாவை திருச்சூரிலும் சந்தீப் நாயரை அங்கமலியில் உள்ள தனிமை முகாமிலும் அடைத்து வைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
Related Tags :
Next Story