சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு: சென்னை மண்டலத்தில் 96.17 % பேர் தேர்ச்சி


சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு: சென்னை மண்டலத்தில் 96.17 % பேர் தேர்ச்சி
x
தினத்தந்தி 13 July 2020 2:19 PM IST (Updated: 13 July 2020 2:19 PM IST)
t-max-icont-min-icon

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ரமேஷ் போக்ரியால் தகவல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தில் (சி.பி.எஸ்.இ.) 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான தேர்வில், கொரோனா ஊரடங்கால் சில தேர்வுகள் நடத்த முடியாமல் போனது. அவர்களுக்கு மீண்டும் தேர்வு தேதியை அறிவித்து, தேர்வுகளை நடத்த சி.பி.எஸ்.இ. நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தினால் அதனை ரத்து செய்து, மாணவர்களுக்கு மதிப்பெண் எந்த வகையில் கணக்கிடப்படும் என்று சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டது.

அதற்கான பணிகளில் சி.பி.எஸ்.இ. நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், நேற்று சமூக வலைதளங்களில் சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்த தகவல்கள் வெளியாகின. அதில் 10-ம் வகுப்புக்கு வருகிற 13-ந்தேதியும், 12-ம் வகுப்புக்கு வருகிற 11-ந்தேதியும் (நாளை) தேர்வு முடிவு வெளியாகிறது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இது வெளியான சற்று நேரத்தில் சி.பி.எஸ்.இ. தன்னுடைய ‘டுவிட்டர்’ பக்கத்தில் இந்த தகவலை பதிவிட்டு, இது போலியானது என்று அதில் குறிப்பிட்டது.

இந்நிலையில், சிபிஎஸ்இ-இன் அதிகாரப்பூர்வ இணையதளமான http://cbseresults.nic.in என்ற தளத்தில் 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதன்படி, வெளியான தேர்வு முடிவுகளில் 88.78 சதவீதத்தினர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

திருவனந்தபுரம், பெங்களூர் ஆகிய நகரங்கள் இந்தியாவிலேயே அதிகபட்ச தேர்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளது. அங்கு 97 சதவீதத்தினர் தேர்ச்சியடைந்துள்ளனர். சென்னை மண்டலத்தில் 96.17 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

முதலிடத்தில் திருவனந்தபுரமும், இரண்டாவது இடத்தில் பெங்களூருவும், மூன்றாவது இடத்தில் சென்னை மண்டலமும் உள்ளது. மாணவிகள் 92.15 சதவீதம் பேரும், மாணவர்கள் 86.19 சதவீதம் பேரும், தேர்ச்சி பெற்றுள்ளனர்.


Next Story