சீனா மீது உலக நாடுகள் வெறுப்பு; இந்திய ஆலைகளுக்கு பெரிய வாய்ப்பு: நிதின் கட்காரி பேட்டி
உலக நாடுகள் சீனாவின் மீது அதிகம் ஆர்வம் காட்டாத சூழல் இந்திய தொழிற்சாலைகளுக்கு பெரிய வாய்ப்பு ஆக அமைந்துள்ளது என மத்திய மந்திரி கட்காரி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்புகள் சீனாவின் உகான் நகரில் முதன்முதலில் கண்டறியப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு உலக நாடுகளிலும் லட்சக்கணக்கானோர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். பலியாகியும் உள்ளனர்.
பொருளாதார தேக்கம், ஊரடங்கால் ஏற்பட்ட இயல்பு வாழ்க்கை முடக்கம் உள்ளிட்ட இந்த பாதிப்புகளுக்கு சீனாவே காரணம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு கூறினார். இதனை தொடர்ந்து உலக நாடுகள் அந்நாட்டுடன் வர்த்தகம் மேற்கொள்வதற்கு அச்சப்படும் சூழ்நிலை உருவானது.
இந்நிலையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், சீனா மற்றும் இந்திய ராணுவத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். சீன தரப்பிலும் 40 பேர் வரை பலியாகினர் என தகவல் வெளிவந்தது. எனினும், இதனை சீன அரசு உறுதிப்படுத்தவில்லை.
இதனையடுத்து, இந்திய இறையாண்மை மற்றும் பாதுகாப்பு நலன்களை முன்னிட்டு டிக்டாக், ஹெலோ உள்ளிட்ட சீனாவின் 59 செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. இதனை கவனித்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் அவற்றுக்கு தடை விதிப்பது பற்றிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த சூழலில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்காரி இன்று கூறும்பொழுது, உலக பொருளாதார சூழல் நமக்கு சாதகம் ஆக உள்ளது. சீனாவுடன் தொழில் வாய்ப்பினை ஏற்படுத்தி கொள்ள உலக நாடுகள் அதிக விருப்பம் காட்டவில்லை.
இது இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளுக்கு கிடைத்த பெரிய சந்தர்ப்பம். இது ஒரு மறைமுக ஆசீர்வாதம் ஆகும். இந்த சூழ்நிலையை நமக்கு சாதகம் ஆக நாம் பயன்படுத்தி கொள்ள முடியும். அதிக போட்டியை ஏற்படுத்த முடியும். தரத்தில் கவனம் செலுத்த முடியும் என கூறியுள்ளார்.
நமது நாட்டில் பிற நாட்டு நிறுவனங்கள் வர்த்தகம் தொடங்குவதற்கான சூழல் எளிமையாக்கப்பட்டு உள்ளது. இதற்கான தரவரிசையில், இந்தியாவின் இடம் உலக வங்கியால் முன்பே உயர்த்தி அறிவிக்கப்பட்டது. ஆனால், வர்த்தகம் தொடங்குவதற்கான அனுமதி, சான்றிதழ் உள்ளிட்டவற்றை பெறுவதில் அதிக சிக்கல் உள்ளது.
இதனால் அனைத்து நடைமுறைகளையும் டிஜிட்டல் மயம் ஆக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு உள்ளோம். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.), வேளாண் வளர்ச்சி விகிதம் மற்றும் கிராமப்புற தொழிற்சாலை வளர்ச்சி ஆகியவற்றை அதிகரிப்பதே நம்முடைய குறிக்கோள் என அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story