மாஸ்க் அணிவது தொடர்பான தகராறில் 19 வயது மாணவி கொலை


மாஸ்க் அணிவது தொடர்பான தகராறில் 19 வயது மாணவி கொலை
x
தினத்தந்தி 13 July 2020 9:48 PM IST (Updated: 13 July 2020 9:48 PM IST)
t-max-icont-min-icon

ஆந்திராவில் மாஸ்க் அணிவது தொடர்பான தகராறில் 19 வயது மாணவி கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஐதரபாத்,

கொரோனா தொற்றை தடுக்க  பொதுமக்கள் முக கவசங்கள் , சமூக இடைவெளியை பின்பற்றுவது அவசியம் என   மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்தநிலையில் மாஸ்க் அணிவது தொடர்பான தகராறில் ஆந்திராவில் 19 வயது மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் ஜூலை 3-ம் தேதி நடந்துள்ளது. சிகிச்சை பெற்றபோது சிறுமி இறந்த பின்னர் 11-ம் தேதி வெளிச்சத்திற்கு வந்தது.

ஆந்திரமாநிலம் குண்டூர் மாவட்டம் ரென்டாசிந்தலாவை சேர்ந்தவர் பாத்திமா (வயது 19) இவர் அந்த பகுதியில் மாஸ்க் அணியாமல் சுற்றி திரிந்தாக கூறப்படுகிறது. இது குறித்து அவரது தாய் அன்னாபுரெடியிடம் மல்லிகார்ஜுனா என்பவர் கேள்வி எழுப்பியதாக தெரிகிறது.

முன்னதாக மல்லிகார்ஜுனா மற்றும் அவரது சகோதரரும் உன் மகள் ஏன் மாஸ்க் அணியாமல் சுற்றி திரிகிறார் என்று பாத்திமா தந்தையிடம் சண்டையிட்டதாக கூறப்படுகிறது.

மல்லிகார்ஜுனா ஒரு கட்டத்தில் பாத்திமா தாயிடம் வாய் தகராறு முற்றி கைகலப்பானது. முடிவில்
மல்லிகார்ஜுனா அவரது உறவினர்கள் சேர்ந்து பாத்திமாவின் தந்தை மற்றும் தாயை கட்டையால் தாக்கியதாக தெரிகிறது. பாத்திமா அவர்களை மீட்பதற்காக மல்லிகார்ஜுனா மற்றும் அவரது உறவினர்களை தடுத்தாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் மல்லிகார்ஜுனா கட்டையால் தாக்கியதில் பாத்திமாவின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.  பலத்த காயத்துடன் அவர் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார். உடனடியாக சிகிச்சைக்காக அவர் குண்டூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்தநிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட நான்கு பேரையும் கைது செய்தனர்.

ஆந்திராவில் கடந்த இரண்டு வார காலத்திற்குள் மாஸ்க் அணிவது தொடர்பான தகராறு தொடர்பாக தாக்குதல் நடத்திய இரண்டாவது சம்பவம் இதுவாகும்.

சமீபத்தில் நெல்லூர் மாவட்டத்தில் மாஸ்க் அணியச் சொன்னதற்காக சுற்றுலாத்துறை ஊழியர் ஒருவர் தனது சக ஊழியரால் தாக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story