சச்சின் பைலட் டுவிட்டரின் முகப்பு பக்கம் உடனடியாக மாற்றியமைப்பு


சச்சின் பைலட் டுவிட்டரின் முகப்பு பக்கம் உடனடியாக மாற்றியமைப்பு
x
தினத்தந்தி 14 July 2020 3:42 PM IST (Updated: 14 July 2020 3:42 PM IST)
t-max-icont-min-icon

ராஜஸ்தான் துணை முதல் மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்ட சச்சின் பைலட் தனது டுவிட்டரின் முகப்பு பக்கத்தில் மாற்றம் செய்துள்ளார்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் அரசின் முதல்-மந்திரி அசோக் கெலாட், துணை முதல்-மந்திரியாக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே நீண்ட காலமாக அதிகார மோதல் இருந்து வந்தது. கடந்த சில நாட்களாக இந்த மோதல் பகிரங்கமாக வெடித்தது.

தனக்கு 30 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாகவும், கெலாட் அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாகவும் நேற்று முன்தினம் சச்சின் பைலட் அறிவித்தார். மேலும் நேற்று நடைபெற இருந்த மாநில சட்டசபை காங்கிரஸ் 
எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், கொறடா உத்தரவையும் மீறி, சச்சின் பைலட்டும், அவரது ஆதரவாளர்கள் என கருதப்படும் சில எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்கவில்லை.

தொடர்ந்து, சச்சின் பைலட் தனக்கு 30 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதை நிரூபிக்க அவர்களது வீடியோவை வெளியிட்டார். சச்சின் பைலட்டின் முகாமில் சுமார் 15 எம்.எல்.ஏ.க்கள் ஒன்றாக அமர்ந்திருக்கும் வீடியோ வெளியிடப்பட்டது.

இந்நிலையில், ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ஜெய்ப்பூரில் போர்மான்ட் ஓட்டலில் இன்று நடைபெற்றது.  இதில், 102 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.  எனினும், 2வது கூட்டத்திலும் பைலட் உள்பட அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொள்ளவில்லை.  இதனையடுத்து சச்சின் பைலட்டை கட்சியில் இருந்து நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து சச்சின் பைலட் துணை முதல் மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ரன்தீப் சிங் சுர்ஜிவாலா அறிவித்துள்ளார்.  இதேபோன்று, ராஜஸ்தான் பிரதேச காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்தும் சச்சின் பைலட் நீக்கப்பட்டு உள்ளார்.  விஸ்வேந்தர் சிங், ரமேஷ் மீனா ஆகிய 2 மந்திரிகளும் நீக்கப்பட்டு உள்ளனர்.

இந்த சூழலில், ராஜஸ்தான் துணை முதல் மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்ட சச்சின் பைலட் தனது டுவிட்டரின் முகப்பு பக்கத்தில் மாற்றம் செய்துள்ளார்.  அதில், பழைய முகப்பு படத்தில், ராஜஸ்தான் துணை முதல் மந்திரி, பிரதேச காங்கிரஸ் தலைவர், முன்னாள் தொலைதொடர்பு மற்றும் தகவல் தொடர்பு இணை மந்திரி மற்றும் முன்னாள் கார்ப்பரேட் விவகார இணை மந்திரி ஆகிய பொறுப்புகளை வகித்தது குறிப்பிடப்பட்டு இருந்தது.

அவற்றை மாற்றியமைத்து உள்ள சச்சின் பைலட், டோங்க் தொகுதியின் எம்.எல்.ஏ., முன்னாள் தொலைதொடர்பு மற்றும் தகவல் தொடர்பு இணை மந்திரி மற்றும் முன்னாள் கார்ப்பரேட் விவகார இணை மந்திரி ஆகிய பொறுப்புகளை வகிப்பது போன்று பதிவு செய்துள்ளார்.  அவரது டுவிட்டர் பதிவுகளை 23 லட்சம் பேர் பின்தொடருகின்றனர்.

Next Story