அரியானாவில் தொடரும் அதிரடி; சிறந்த பஞ்சாயத்து தலைவிகளுக்கு ஸ்கூட்டி
அரியானாவில் சிறந்த பஞ்சாயத்து பெண் உறுப்பினர்களுக்கு ஸ்கூட்டி வழங்கப்படும் என துணை முதல் மந்திரி பேட்டியில் கூறியுள்ளார்.
சண்டிகர்,
அரியானாவில் பா.ஜ.க. தலைமையிலான முதல் மந்திரி மனோகர் லால் கட்டார் ஆட்சி நடந்து வருகிறது. இதன் கூட்டணி கட்சியான ஜனநாயக ஜனதா கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுதாலா அரியானாவின் துணை முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.
கடந்த வருடம் நடந்த சட்டசபைக்கான தேர்தலின்பொழுது, அரியானாவில் தனியார் பணிகளில் இளைஞர்களுக்கு 75% இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யப்படும் என இந்த இரு கூட்டணி கட்சிகளும் அறிவித்தன. இதனை தொடர்ந்து இக்கூட்டணி ஆட்சியை பிடித்தது.
தொடர்ந்து, தேர்தல் வாக்குறுதியின்படி, அரியானாவில் தனியார் பணிகளில் இளைஞர்களுக்கு 75% இடஒதுக்கீடு அளிக்கும் வரைவு மசோதா கடந்த 6ந்தேதி அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டது. துஷ்யந்த் தாக்கல் செய்த இந்த மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. அதன்பின், இது அரியானா மாநில இளைஞர்களுக்கு வரலாற்று சிறப்புமிக்க நாள் என்று துஷ்யந்த் கூறினார்.
இதனை தொடர்ந்து மற்றொரு அதிரடியாக, அரியானாவில் சிறந்த பஞ்சாயத்து தலைவிகள், பஞ்சாயத்து பெண் உறுப்பினர்கள் மற்றும் பிற பஞ்சாயத்து அமைப்புகளில் பணிபுரியும் பெண்களுக்கு அவர்களின் சிறந்த செயல்திறனுக்காக அரசு ஸ்கூட்டி வழங்கும் என துணை முதல் மந்திரி துஷ்யந்த் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார.
எங்களுடைய பா.ஜ.க. மற்றும் ஜனநாயக ஜனதா கூட்டணி அரசு, பஞ்சாயத்துகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க யோசித்து வருகிறது. இந்ந விவகாரத்தில் இரு கட்சிகளின் சட்டசபை உறுப்பினர்களும் ஆலோசனை செய்து வருகின்றனர். இதுபற்றிய இறுதி முடிவு மிகவிரைவில் அறிவிக்கப்படும் என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story