சச்சின் பைலட்டுக்காக கதவைத் திறந்து வைக்க ராகுல் காந்தி விரும்புவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல்


சச்சின் பைலட்டுக்காக கதவைத் திறந்து வைக்க ராகுல் காந்தி  விரும்புவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல்
x
தினத்தந்தி 16 July 2020 6:56 AM IST (Updated: 16 July 2020 6:56 AM IST)
t-max-icont-min-icon

சச்சின் பைலட்டுக்காக கதவைத் திறந்து வைக்க ராகுல் காந்தி விரும்புவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

ஜெய்ப்பூர்

காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் ராஜஸ்தான் மாநிலத்தில், முதல்-மந்தரி அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்-மந்திரியாக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

தனக்கு 30 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாகவும், இதனால் அசோக் கெலாட் அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாகவும் போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட்டை சமாதானப்படுத்தும் முயற்சியில் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் ஈடுபட்டனர். ஆனால் பலன் இல்லை.

இந்த நிலையில், சட்டசபை காங்கிரஸ் கட்சி கூட்டத்தை முதல்-மந்திரி அசோக் கெலாட் கடந்த 13-ந் தேதி நடத்தினார். இதில் கலந்து கொள்ளுமாறு அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க் களுக்கும் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சச்சின் பைலட்டும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரும் இதில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.

நேற்று முன்தினம் நடைபெற்ற சட்டசபை காங்கிரஸ் கட்சி கூட்டத்திலும் சச்சின் பைலட்டும், அவரது ஆதரவாளர்களும் கலந்து கொள்ளவில்லை.

அசோக் கெலாட் அரசை கவிழ்க்க பாரதீய ஜனதா முயற்சிப்பதாக காங்கிரஸ் கட்சி ஏற்கனவே குற்றம்சாட்டி இருக்கும் நிலையில், சட்டசபை கட்சி கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி ஜெய்ப்பூர் அருகே உள்ள ஒரு விடுதியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

அதேசமயம் அசோக் கெலாட்டுக்கு போதிய எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதால், அரசுக்கு ஆபத்து இல்லை என அவரது ஆதரவாளர்கள் கூறி உள்ளனர்.

சச்சின் பைலட்டின் நடவடிக்கைகளால் மிகுந்த அதிருப்தி அடைந்த முதல்-மந்திரி அசோக் கெலாட் நேற்று முன்தினம் அவரை துணை முதல்-மந்திரி பதவியில் இருந்து அதிரடியாக நீக்கினார். அத்துடன் அவரது ஆதரவு மந்திரிகளான விஸ்வேந்திர சிங், ரமேஷ் மேனா ஆகியோரையும் நீக்கினார். மேலும் சச்சின் பைலட்டிடம் இருந்து மாநில காங்கிரஸ் தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது. அத்துடன் அவரது ஆதரவாளர்கள் சிலரின் கட்சி பதவிகளும் பறிக்கப்பட்டன.

இந்த நிலையில், கொறடா உத்தரவை மீறி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்த சச்சின் பைலட் உள்ளிட்ட 19 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீது அரசியல் சாசனத்தின் 10-வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி காங்கிரஸ் தலைமை கொறடா மகேஷ் ஜோஷி சபாநாயகர் சி.பி.ஜோஷிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

ராகுல் காந்திக்கு பைலட்டுடன் இதுவரை நேரடி தொடர்பு இல்லை, வார இறுதியில் ஒரு முறை தூதர்கள் மூலம் அவருடன் பேசியுள்ளார். பிரியங்கா காந்தி வதேராவுடன் மூன்று முறை பேசி உள்ளார்.என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. 

ராகுல் காந்தி "சச்சின் பைலட்டுக்கான வாய்ப்புகளை கொடுப்பதில்  ஆர்வமாக உள்ளார்" என்று காங்கிரஸின் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. பைலட் பாஜகவில் சேரவில்லை என்று அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பின்னர். கட்சி மேலிடம் அசோக் கெலாட்டிடம் சச்சின் பைலட்டுக்கு  எதிரான அறிக்கைகளை குறைக்குமாறு கேட்டுக் கொண்டு உள்ளது. 

நீங்கள் பாஜகவுக்கு செல்ல விரும்பவில்லை  என்றால், எந்த பாஜக தலைவர் அல்லது உறுப்பினர்களுடன் பேசுவதை நிறுத்துங்கள் என்று மூத்த தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறிஉள்ளார்.

Next Story