திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 15 அர்ச்சகர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 15 அர்ச்சகர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
x
தினத்தந்தி 16 July 2020 3:16 PM IST (Updated: 16 July 2020 3:16 PM IST)
t-max-icont-min-icon

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 15 அர்ச்சகர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

திருமலை,

ஆந்திராவில் கொரோனா பாதிப்பு அதிகரித்த சூழலில் கடந்த மார்ச் 19ந்தேதி திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது.  அலிபிரியில் இருந்து திருமலை செல்லும் இரு மலைப்பாதைகளும், ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையும் மூடப்பட்டு பக்தர்கள் வருகை நிறுத்தப்பட்டது.  பக்தர்கள் யாரும் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

எனினும், கோவிலில் சுவாமிக்கு தினமும் நடைபெறும் அனைத்து ஆராதனைகள், பூஜைகள், வழக்கம் போல் நடைபெற்றன.  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 120 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களின் வருகை நிறுத்தப்பட்டது.

இதன்பின்னர், நாடு முழுவதும் கடந்த ஜூன் மாதம் 8ந்தேதி முதல் கோவில்களை திறக்க பல்வேறு நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி அளித்தது.  இதன்படி, 83 நாளுக்கு பிறகு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்காக கடந்த ஜூன் மாதம் 8ந்தேதி அனுமதிக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். 10ந்தேதி திருப்பதி மற்றும் திருமலையில் வசிக்கும் உள்ளூர் மக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.  11ந்தேதி வெளியூர், வெளி மாநில பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 15 அர்ச்சகர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதுபற்றி திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் தலைமை அர்ச்சகர் மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தான ஆகம ஆலோசகரான ரமண தீக்சிதுலு டுவிட்டர் வழியே தெரிவித்து உள்ள செய்தியில், 50 அர்ச்சகர்களில் 15 அர்ச்சகர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இன்னும் 25 பேருக்கு முடிவுகள் வெளிவர வேண்டும்.  ஆனால், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் அதிகாரி மற்றும் உதவி செயல் அதிகாரி ஆகியோர் சாமி தரிசனம் நிறுத்துவதற்கு மறுப்பு தெரிவித்து உள்ளனர்.  இது தொடர்ந்தால் பேரிடர் ஏற்படும்.  அதனால் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து உள்ளார்.

Next Story