கொரோனா தொற்று உச்சத்தில் எவ்வளவு பேருக்கு பாதிப்பு ஏற்படும்? இந்திய அறிவியல் அமைப்பு கணிப்பு


கொரோனா தொற்று உச்சத்தில் எவ்வளவு பேருக்கு பாதிப்பு ஏற்படும்? இந்திய அறிவியல் அமைப்பு கணிப்பு
x
தினத்தந்தி 16 July 2020 11:14 AM GMT (Updated: 2020-07-16T16:44:57+05:30)

இந்தியாவில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா பாதிப்பு மிக மோசமான சூழலை எட்டலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு இன்னும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கவில்லை. தடுப்பு மருந்துகள் இன்னும் ஆரம்ப கட்ட பரிசோதனையில் இருப்பதால், சமூக இடைவெளி பின்பற்றுதல், கை கழுவுதல்,  முகக்கவசம் அணிதல் ஆகியவற்றின் மூலமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்ற நிலை உள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25 ஆம் தேதி கடுமையான ஊரடங்கு  பிறப்பிக்கப்பட்டாலும், தற்போது மக்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதனால், இந்தியாவில்  கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினம் தினம் புதிய உச்சத்தை கட்டி வருகிறது. இன்று ஒருநாளில் மட்டும் சுமார் 32 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.  

 இந்த நிலையில், இந்தியாவில் அடுத்தாண்டு மார்ச் இறுதியில், கொரோனா தொற்று பாதிப்பு மோசமான சூழ்நிலையில் 6.18 கோடியாகவும், சிறந்த சூழ்நிலையில் 37.4 லட்சமாகவும் இருக்கும் என்று  இந்திய அறிவியல் கழகம் கணித்துள்ளது.  இந்திய அறிவியல் கழகம்  கணிப்பின் படி, “ அடுத்த ஆண்டு  மார்ச் மாதத்தில்  கொரோனா பரவல் மோசமான சூழலில் இந்தியாவில் பாதிப்பு 6.18 கோடியாக இருக்கும். அதேநேரத்தில் சிறந்த சூழலில், 37.4 லட்சம் என்ற அளவில் இருக்கும்.  மார்ச் 23 முதல் ஜூன் 18 வரையிலான தொற்று பரவலின்  முன்னுதாரண மாற்றம் மற்றும் கணித  அடிப்படையிலும் இந்த தரவுகள் கணக்கிடப்பட்டுள்ளது. எனினும், நாட்டில் தற்போது நிலவும் சூழலின் அடிப்படையில் இந்த கணிப்புகளில் மாற்றம் இருக்கும்.

இந்தியாவில் மார்ச் 2021-வரை கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டாது என்றே மோசமான சூழல்  என்பது குறிப்பிடுகிறது. சிறந்த சூழ்நிலை என்பது செப்டம்பர் இரண்டாவது வாரம் அல்லது அக்டோபருக்குள்  வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், வாரத்தில் இரண்டு நாட்கள் முழு முடக்கம் அமல்படுத்தப்படுவது தொற்று பரவல் வேகத்தை குறைப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும்  தொற்று பரவலை கண்டுபிடிப்பது, தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடித்தல் ஆகியவை தடுப்பு மருந்து இல்லாத சமயத்தில் சிறந்த பலனை கொடுப்பதாகவும் இந்திய அறிவியல் கழகம் தெரிவித்துள்ளது.


Next Story