அடுத்த 3.5 ஆண்டுகளில் ரெயில்வே துறை 100% மின்மயம் ஆக்கப்படும்; ரெயில்வே மந்திரி
அடுத்த 3.5 ஆண்டுகளில் ரெயில்வே துறை 100% மின்மயம் ஆக்கப்படும் என மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
இந்திய தொழில் கூட்டமைப்பு நிகழ்ச்சியில் மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் கலந்து கொண்டு இன்று பேசும்பொழுது, ரெயில்வே துறை அடுத்த 3.5 ஆண்டுகளில் 100% மின்மயம் ஆக்கப்படும். அடுத்த 9 முதல் 10 ஆண்டுகளில் 100% கார்பன் மாசு இல்லாத துறையாக மாற்றியமைக்கப்படும்.
இதனால், வரும் 2030ம் ஆண்டில், உலகின் முதல் மிக பெரிய தூய்மையான ரெயில்வே துறையை நாம் கொண்டிருப்போம். நாம் ஒவ்வொருவரும் பெருமைக்குரிய குடிமகனாக இருந்திடுவோம் என கூறினார்.
ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே மின்வினியோக அமைப்பு என்ற வாசகத்தினை பிரதமர் மோடி முன்மொழிந்து உள்ளார். சர்வதேச புதுப்பிக்கத்தக்க சமூகத்தில் இந்தியா முன்னணி வகித்து வருகிறது. சர்வதேச சூரிய மின்திட்டத்திற்கு மாறுவதற்காக நாம் அனைவரும் பணியாற்றி கொண்டிருக்கிறோம். பிரதம மந்திரி குசும் திட்டத்தின்கீழ் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கட்டமைப்புக்கு விவசாயிகளை கூட நாங்கள் அழைத்து வந்திருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
நாட்டில் வரும் 2022ம் ஆண்டுக்குள் சூரிய மற்றும் பிற புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் வழியே 25,750 மெகா வாட் மின் உற்பத்தி மேற்கொள்வதற்காக மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம் பிரதம மந்திரி குசும் திட்டத்தினை அறிமுகப்படுத்தியது. விவசாயிகளுக்கான நலன்களை முன்னிட்டு கொண்டு வரப்பட்டு உள்ள இந்த திட்டத்திற்கு மத்திய அரசின் சார்பில் ரூ.34.422 கோடி நிதியுதவி வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story