ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசியில் இரட்டை பாதுகாப்பு - செப்டம்பரில் மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது


ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசியில் இரட்டை பாதுகாப்பு - செப்டம்பரில் மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது
x
தினத்தந்தி 17 July 2020 4:00 AM IST (Updated: 17 July 2020 1:30 AM IST)
t-max-icont-min-icon

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசியில் இரட்டை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் தொற்று நோய் முதன்முதலாக வெளிப்பட்டபோது, அதன் கரங்கள் ஆக்டோபஸ் கரங்களாக நீளும், உலக நாடுகளையெல்லாம் தன் பிடியில் கொண்டு வரும் என.

ஆனால் அதை கொரோனா வைரஸ் இன்றளவும் தொடர்கிறது. இதனால்தான் உலகளவில் 1 கோடியே 35 லட்சத்துக்கும் மேற்பட்டோரை தன் பிடியில் கொண்டு வந்திருக்கிறது. 5.84 லட்சம் உயிர்களை காவு வாங்கி இருக்கிறது.

அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷியா, பெரு, மெக்சிகோ, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து என கொரோனாவின் கோரத்தாண்டவத்தில் நாடுகள் நிலை குலைந்து போய் விட்டன.

ஊரடங்கு, முக கவசம், தனிமனித இடைவெளி, கைச்சுத்தம் என ஆயிரம்தான் கட்டுப்பாடுகளை, விதிமுறைகளை அமல்படுத்தி பார்த்தும் நாடுகளுக்கு இன்று வரை ஏமாற்றம்தான் மிச்சமாகி இருக்கிறது.

ஒற்றை நம்பிக்கை....

தடுப்பூசி ஒன்றுதான், கொரோனா என்ற அரக்கனை தடுத்து வீழ்த்த முடியும் என்பதுதான் இப்போது உலக மக்களின் ஒரே நம்பிக்கையாக இருக்கிறது.

அதிலும் இப்போது இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஜென்னர் இன்ஸ்டிடியூட் உருவாக்கியுள்ள தடுப்பூசி, உலகின் பிற எந்த தடுப்பூசியையும் விட சிறப்பானது என இப்போது தெரிய வந்திருக்கிறது. நிரூபிக்கப்பட்டும் இருக்கிறது.

இந்த தடுப்பூசியை உருவாக்குவதில் இங்கிலாந்து அரசும், அஸ்ட்ராஜெனேகா மருந்து நிறுவனமும் உதவிக்கரம் நீட்டி உள்ளன.

இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்திப்பார்க்கும் சோதனையில் மிக முக்கியமான மூன்றாவது கட்டம் தொடங்கி விட்டது.

இந்த தடுப்பூசியை ஒரு முறை செலுத்திக்கொண்டவர்களை இது எப்படி பாதுகாக்கிறது என்பதை ஆராய்ந்திருக்கிறார்கள். இதற்காக அவர்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து சோதித்துப்பார்த்திருக்கிறார்கள். அதில் கண்டுபிடித்திருக்கும் உண்மை, இந்த தடுப்பூசியானது நோய் எதிர்ப்புச்சக்தியை உருவாக்கி இருப்பது மட்டுமல்ல, ‘டி செல்’களையும் உருவாக்கி இருக்கிறது என்பதுதான். இது விஞ்ஞானிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

இரட்டை பாதுகாப்பு

அந்த வகையில் இந்த தடுப்பூசி இரட்டை பாதுகாப்பு அளிக்கக்கூடியதாக அமைகிறது என்பது மிகவும் சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது.

எப்படியெனில், இந்த தடுப்பூசி நோய் எதிர்ப்புச்சக்தியை மட்டும் கொண்டிருந்தால், அந்த நோய் எதிர்ப்புச்சக்தி ஒரு கட்டத்தில் மங்கிப்போகும்.

ஆனால் ‘டி செல்’கள் அப்படியல்ல. அவை ஆண்டுக்கணக்கில் உடலில் இருக்கும்.

இதை அந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகளுக்கு நெருக்கமாக உள்ள தரப்பு தெரிவித்ததாக இங்கிலாந்தில் வெளியாகிற ‘தி டெய்லி டெலகிராப்’ நாளேடு கூறுகிறது.

அதே நேரத்தில் இந்த தடுப்பூசி, கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிரான நீண்டகால நோய் எதிர்ப்புச்சக்தியை வழங்குமா என்பது இன்னும்நிரூபிக்கப்படவில்லை.

ஆனால் நோய் எதிர்ப்புச்சக்தியையும், ‘டி செல்’களையும் உற்பத்தி செய்கிறது என்பதே மிகுந்த நம்பிக்கை அளிக்கும் அம்சம். இது மக்களை பாதுகாக்கும். இதுவரை அந்த வகையில் தடுப்பூசி நன்றாகவே செயல்பட்டு வருகிறது. இது ஒரு முக்கியமான தருணம்தான். ஆனாலும் இன்னும் இதில் நீண்ட தொலைவு பயணிக்க வேண்டியதிருக்கிறது என்பது விஞ்ஞானிகளின் பார்வையாக இருக்கிறது.

தடுப்பூசியால் நோய் எதிர்ப்புச்சக்தியும், ‘டி செல்’களும் உருவாகின்றன என்றது இரட்டை தற்பாதுகாப்பு என்று மற்றொரு வட்டாரம் தெரிவிக்கிறது.

செப்டம்பரில் கிடைக்கும்...

இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்திப்பார்க்க பச்சைக்கொடி காட்டிய பெர்க்‌ஷயர் ஆராய்ச்சி நெறிமுறை குழு தலைவர் டேவிட் கார்பென்டர் கூறுகையில், “ தடுப்பூசி குழு முற்றிலும் சரியான பாதையில் செல்கிறது. யாரும் இதில் இறுதி தேதிகளை கூறி விட முடியாது. சில நேரங்களில் தவறாக போய்விடவும் வாய்ப்பு உண்டு. பெரிய மருந்து நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதால் இந்த தடுப்பூசி செப்டம்பர் மாதம் பொது மக்களின் பயன்பாட்டுக்கு பரவலாக கிடைக்கக்கூடும். அதுவே அவர்கள் செயல்படுகிற இலக்கு ஆகும்” என்று கூறினார்.

இந்த தடுப்பூசிக்கு ‘சிஎச்ஆட்ஆக்ஸ் 1 என்கோவ்-19’ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசி பற்றி அஸ்ட்ராஜெனேகா மருந்து நிறுவனம் கூறுகையில், “மூன்றாம் கட்ட சோதனை தொடங்கி இருக்கிறது. இதில் பல்லாயிரக்கணக்கானோருக்கு தடுப்பூசி போடுகிறபோது அதன் பாதுகாப்பு, நோய் எதிர்ப்புச்சக்தி அளவிடப்படும். செயல்திறனும் தெரிய வரும்” என தெரிவித்தது.

தடுப்பூசியை உருவாக்கியுள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஜென்னர் இன்ஸ்டிடியூட்டின் தடுப்பூசித்துறை பேராசிரியர் சாரா கில்பர்ட் கூறும்போது, “கொரோனா வைரஸ் தடுப்பூசி குழு, தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்புத்திறனை மதிப்பிடுவதில் கடுமையாக உழைத்து வருகிறது. மேலும் தடுப்பூசி செயல்திறனை மதிப்பிடுவதற்கு தயாராகி வருகிறது” என குறிப்பிட்டார்.

இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள ‘கோவேக்சின்’ தடுப்பூசி, கொரோனா வைரஸ் திரிபுவை அடிப்படையாகக்கொண்டது. ‘ஜைகோவ்-டி’ பிளாஸ்மிட் டி.என்.ஏ.வை ஆதாரமாக கொண்டது. இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசியை பொறுத்தமட்டில், இது மனித குரங்குகளில் தொற்றுநோயை ஏற்படுத்தும் ஜலதோஷத்தின் பலவீனமான பாதிப்புகளையும், கொரோனா வைரசின் ‘ஸ்பைக்’ புரதத்தையும் அடிப்படையாக கொண்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தடுப்பூசிதான் கொரோனாவை தடுத்து நிறுத்த முதலில் களம் இறங்கும் என்ற நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் பிரகாசிக்கிறது.

Next Story