கிழக்கு லடாக்கில் முழுவதுமாக படைகளை விலக்குவது சிக்கலானது - இந்திய ராணுவம் தகவல்


கிழக்கு லடாக்கில் முழுவதுமாக படைகளை விலக்குவது சிக்கலானது - இந்திய ராணுவம் தகவல்
x
தினத்தந்தி 16 July 2020 11:45 PM GMT (Updated: 16 July 2020 8:05 PM GMT)

கிழக்கு லடாக்கில் முழுவதுமாக படைகளை விலக்குவது சிக்கலானது எனவும், அங்கு தொடர்ச்சியான சரிபார்த்தல் அவசியம் எனவும் இந்திய ராணுவம் கூறியுள்ளது.

புதுடெல்லி,

கிழக்கு லடாக்கின் சில பகுதிகளில் சீன படைகள் கடந்த மே மாதம் ஊடுருவியதால் இரு நாட்டு ராணுவம் இடையே அடுத்தடுத்து மோதல் ஏற்பட்டது. இதில் கடந்த மாதம் 15-ந்தேதி கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த சண்டையில் இரு தரப்பிலும் உயிரிழப்புகளும் நிகழ்ந்தன.

இதைத்தொடர்ந்து லடாக் எல்லை பிராந்தியம் முழுவதும் அமைதியை ஏற்படுத்த இரு நாட்டு ராணுவம் மற்றும் தூதரக மட்டத்தில் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இதில் கடந்த 5-ந்தேதி இருநாட்டு எல்லை விவகார பிரதிநிதிகள் (இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீன வெளியுறவு மந்திரி வாங் யி) நடத்திய பேச்சுவார்த்தைக்குப்பின் கிழக்கு லடாக்கில் இருந்து இரு தரப்பும் படைகளை விலக்கி வருகின்றன.

கடந்த 6-ந்தேதி முதல் நடந்து வந்த இந்த முதற்கட்ட படை விலக்கல் நடவடிக்கைகள் முற்றுப்பெற்றன. இதில் கல்வான் பள்ளத்தாக்கு, ஹாட்ஸ்பிரிங், கோக்ரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இருதரப்பும் வெளியேறின.

இதைத்தொடர்ந்து கிழக்கு லடாக்கில் அடுத்தகட்ட படை விலக்கல் தொடர்பாக கடந்த 14-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை தொடர்ந்து 15 மணி நேரம் இரு தரப்பும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் மட்டத்தில் நடந்த இந்த 4-வது சுற்று பேச்சுவார்த்தையில், இந்திய தரப்பில் லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங்கும், சீன தரப்பில் மேஜர் ஜெனரல் லியு லினும் பங்கேற்றனர்.

இருநாட்டு எல்லை விவகார பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவின்படி இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் கிழக்கு லடாக்கில் இருந்து இரு தரப்பும் முற்றிலுமாக படைகளை விலக்கிக்கொள்வது என முடிவு எடுக்கப்பட்டது.

இது குறித்து இந்திய ராணுவம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

கிழக்கு லடாக்கில் நடந்த முதற்கட்ட படை விலக்கல் குறித்து இருதரப்பு ராணுவ மூத்த கமாண்டர்களும் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அங்கு முழுவதுமான படை விலக்கலை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

கிழக்கு லடாக்கில் இருந்து முற்றிலும் படைகளை விலக்கிக்கொள்வதில் இருதரப்பும் தொடர்ந்து உறுதியுடன் இருக்கின்றன. இந்த நடவடிக்கைகள் சிக்கலானது. அத்துடன் தொடர் சரிபார்த்தலும் அவசியம் ஆகும். எனினும் ராணுவம் மற்றும் தூதரக மட்டத்திலான தொடர் சந்திப்புகள் மூலம் இந்த நடவடிக்கைகளை இருதரப்பும் முன்னெடுத்து செல்லும்.

இவ்வாறு ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Next Story